பிரித்தானியாவில் 2 இளம்பெண்கள் உட்பட ஒரு பார்வையற்ற மனிதன் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபருக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.
இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் பகுதியில் கடந்த டிசம்பர் மாதம், Nabil Errouam (35) என்கிற நபர் 7 அங்குல நீளமான கத்தியை கொண்டு தாக்குதல் நடத்துவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், கத்திக்குத்து தாக்குதலில் காயமடைந்த 50 வயதான பார்வையற்ற நபரையும், 18 வயதான இளம்பெண்ணையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதன்பிறகு Nabil-ஐ கைது செய்ய விரட்டியுள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க முயன்ற Nabil, பூங்காவிற்குள் நுழைந்து 17 வயது சிறுமியை பிணைக்கைதியாக பிடித்துக்கொண்டு பொலிஸாருக்கு மிரட்டல் விடுத்தான்.
சிறுமியை விட்டுவிடுமாறு பொலிஸார் எச்சரிக்கை விடுத்தனர்.
அதற்குள் சிறுமியின் கால் மற்றும் பின்பக்கத்தில் 13 முறை கத்தியால் குத்தியுள்ளான். உயிர் பயத்தில் அந்த சிறுமி காப்பாற்றுமாறு கதற ஆரம்பித்துள்ளார்.
பொலிஸாரும் தங்களுடைய கையில் வைத்திருந்த மின்சார துப்பாக்கியை கொண்டு சுட்டுள்ளனர். ஆனால் அது Nabil-யின் ஆடையில் உட்புகவில்லை.
இதனை பார்த்த மக்கள் அனைவரும் அங்கிருந்து சிதறி ஓட ஆரம்பித்தனர். இதற்கிடையில் பொலிஸார் Nabil-ஐ மடக்கி பிடித்து கைது செய்தனர்.
இந்த நிலையில் வழக்கினை விசாரித்த நீதிபதி, குற்றவாளிக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.