சென்னை மைதானத்தில் பஞ்சாப் அணிக்கெதிராக நடைபெற்ற போட்டியில் சென்னை அணி மீண்டும் வெற்றி பெற்றுள்ளது.
சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 18வது லீக் ஆட்டத்தில் சென்னை அணியும், பஞ்சாப் அணியும் நேருக்குநேர் மோதின.
இதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் டோனி பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் அதிரடி காட்ட ஆரம்பித்தனர்.
அதேசமயம் பஞ்சாப் அணியின் சுழற்பந்து வீச்சாளர்களும் சிராப்பக செயல்பட்டதால், சீரான இடைவெளியில் அடுத்தடுத்து சென்னை அணியின் விக்கெட்டுகள் சரிந்தன.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் சென்னை அணி மூன்று விக்கெட்டுகளை இழந்து 160 ரன்களை குவித்தது. சென்னை அணியின் சார்பில் அதிகபட்சமாக டு பிளசிஸ் 54 ரன்கள் எடுத்திருந்தார். பஞ்சாப் அணியில் அஸ்வின் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு ஆரம்பத்திலே அதிர்ச்சியளிக்கும் விதமாக அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகள் பறிபோயின. ஆனால் அதன்பிறகு களமிறங்கிய கே.எல் ராகுல் (55) – சர்ஃபராஸ் கான்(67) ஜோடி நிதானமான ஆட்டத்தினை வெளிப்படுத்தி, இருவரும் அரைசதத்தை கடந்தனர்.
ஒரு கட்டத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றுவிடும் என ரசிகர்கள் நினைத்திருந்த வேலையில், ஆட்டத்தின் திருப்பு முனையாக 19வது ஓவர் மாறியது.
பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவிற்கு 5 விக்கெட்டுகளை இழந்து 138 ரன்களை மட்டுமே எடுத்து 22 ரன்வித்தியாசத்தில் சென்னை அணியிடம் வெற்றியை பறிகொடுத்தது.