திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே உள்ள ராகவ நாயகன் பட்டியைச் சேர்ந்த வெள்ளைச்சாமி என்பவருடைய மகள் பிரகதி கோவை ஆவாரம்பாளையம் ரோட்டில் உள்ள ஒரு தனியார் மகளிர் கல்லூரியில் விடுதியில் தங்கி இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.
நேற்று முன்தினம் கல்லூரியில் இருந்து வெளியே சென்றவர் திரும்பி வரவில்லை. அவருடைய செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. மாணவி குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை. பின்னர், பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டு, அவர்கள் காட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
போலீஸார் வழக்கு பதிவு செய்து தேடியதில் பொள்ளாச்சி அருகே பூசாரிபட்டி என்ற இடத்தில் ஒரு இளம்பெண்ணின் பிணம் அரைநிர்வாண கோலத்தில் கிடந்துள்ளது. இதனை அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டுள்ளனர்.
அப்போது பிரகதியின் ஊர்காரரான கோமதி எஎன்ற பெண் உடலை பார்த்துவிட்டு அடையாளம் கண்டு போலீசாருக்கு விபரம் தெரிவித்தார். இத்தகவல் தெரிந்ததும் பிரகதியின் பெற்றோர் துக்கம் தாளாமல் கதறினர். பிரகதி வெளியே சென்ற பொழுது அவரை மர்ம நபர்கள் கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.
மேலும், வரும் ஜூன் மாதம் 13ஆம் தேதி பிரகதிக்கு திருமண நடத்த தடபுடலாக ஏற்பாடு நடந்து கொண்டிருக்க, இச்சம்பவம் அவரது பெற்றோருக்கு தாங்க முடியாத துன்பத்தை கொடுத்துள்ளது. பொள்ளாச்சி ஆபாச வீடியோ குறித்து பிரச்சனைகள் பரவிவரும் நிலையில் பிரகதி சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.