அதிமுக கூட்டணியின் சார்பாக, கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் பாஜக போட்டியிடவுள்ளது. வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன், “பிரச்சாரத்தின் போது பாராளுமன்றத்திற்கு நான் கடந்த முறை ஏழு நாட்கள் மட்டுமே சென்றதாக வசந்தகுமார் கூறியுள்ளார்.
பாராளுமன்றத்தின் உரிய ஆவணங்களை வைத்து அவரால் இப்படிக் கூற முடியுமா? துறைமுகம் கொண்டு வர அனுமதிக்க மாட்டேன் எனக் கூறியவர், இப்போது தான் துறைமுகத்திற்கு எதிரானவன் அல்ல என பிரச்சாரம் செய்து யாரை ஏமாற்ற நினைக்கிறார்?
அவர் மீனவ சமுதாய மக்கள் மட்டுமல்லாமல், இந்த தொகுதி மக்கள் அனைவரையும் ஏமாற்றுகிறாரா? ரப்பர் தொழிற்சாலை திறக்கப்படும் என கூறுகிறார். இஎஸ்ஐ மருத்துவமனை தூத்துக்குடிக்கு சென்றுவிட்டதாக கூறுகிறார். மருத்துவமனை குறித்து அவரால் விளக்கம் அளிக்க முடியுமா?
நமது மருத்துவமனை வேறு, தூத்துக்குடி மருத்துவமனை வேறு, என்ற விவரம் தெரியாமல், திட்டங்கள் தெரியாமல், பேசி வருகிறார். கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் பாஜகவின் வெற்றி அலை வீசுகிறது. அவர் தோல்வி பயத்தில் பேசுகிறார்.
40 ஆயிரம் கோடி செலவில் கன்னியாகுமரியில் பல திட்டங்களை கொண்டு வரவுள்ளோம்.நான் நிறைவேற்றி வைத்த எண்ணற்ற வளர்ச்சித் திட்டங்கள் குறித்து உங்களுக்கு தெரியும். என்னை வெற்றி பெறச் செய்து மக்கள் நலனில் பங்களிக்க தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள்” என அவர் பேசியுள்ளார்.