அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் தவறு செய்து விடாதீர்கள்.! இராமதாஸ்

பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ், அதிமுக தலைமையில் அமைத்து உள்ள கூட்டணியில் இடம்பெற்று உள்ள பாமக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக 7 மக்களவை தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்த 7 தொகுதிகளில் பாமகவை எதிர்த்து திமுக நேரடியாக 6 தொகுதிகளில் போட்டியிடுகிறது. விழுப்புரம் தொகுதியில் ரவிக்குமார் திமுகவின் சின்னமான உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்.

கிட்ட தட்ட பாமக போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் நேரடியாக திமுக களமிறங்கியுள்ளதால், வன்னியர் ஓட்டுக்களை பாமக-விடம் இருந்து பிரிக்க, வேல்முருகன், யாருக்குமே தெரியாத ஒரு சில வன்னிய தலைவர்களை கொண்டு திமுக, பாமக மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறது.

அதேபோல், திமுக தலைவர் ஸ்டாலினும் பாமக மீது ஆதாரமற்ற புகாரை தெரிவிக்கவே, அவர் மீது பாமக தேர்தல் அதிகாரிகளிடம் புகார் அளித்து உள்ளது. மேலும் ஸ்டாலின் கூறிய குற்றச்சாட்டுகளை நிரூபிக்கவில்லை எனில், அவர் திமுக தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று பாமக அறிவித்துள்ளது.

இந்நிலையில், வேலூர் மாவட்டம் ஆம்பூரில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய இராமதாஸ், ”திமுகவினர் சிறுபான்மை இன மக்களுக்கு இட ஒதுக்கீடு அளித்திருப்பதாக கூறுவதை யாரும் நம்ப வேண்டாம். இந்த இடஒதுக்கீடு பாட்டாளி மக்கள் கட்சி பல்வேறு போராட்டங்களை நடத்தி பெற்று தந்தது” என்று தெரிவித்தார்.

மேலும், நாடாளுமன்றத் தேர்தலில் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் சிலரின் பொய்யான பேச்சைக் கேட்டு தவறு செய்ய வேண்டாம் என்றும் பாமக நிறுவனர் டாக்டர்.ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.