நான் ஏன் அரசியலுக்கு வந்தேன்? தமிழிசை விளக்கம்!

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியின் பாஜக வேட்பாளர் தமிழிசை நேற்று தூத்துக்குடி கோவில்பட்டியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்பொழுது அவர் அரசு மற்றும் பெரிய நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள் ஓய்வூதியம் பெறுகிறார்கள். ஆனால், கடைகாரர்கள் அமைப்புசாரா தொழிலாளர்கள் மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்து உள்ளோர்களுக்கு ஓய்வூதியம் கிடைப்பதில்லை.

இதற்காகதான் பிரதமர் நரேந்திர மோடி, அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூபாய்.2000 ஓய்வூதியம் வழங்க உத்தரவிட்டார். மேலும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு 2000 ரூபாய் வழங்கினார். பல அரசியல்வாதிகள் படிக்காமல் டாக்டர் பட்டங்களை பெறுவார்கள்.

ஒரு சிலர் நான் சரியாக படிக்காததால் அரசியலுக்கு வந்து விட்டேன் என நினைக்கலாம். நான் கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று மருத்துவ உயர் படிப்புகளைப் படித்து உள்ளேன். என்னுடைய மருத்துவமனையில் இரவு இரண்டு மணி வரை கண்விழித்து பெண்களுக்கு மருத்துவம் பார்த்துள்ளேன்.

கருவில் இருக்கும் குழந்தைகளுக்கு குறைபாடு இருந்தால், அதை கருவிலேயே சரி செய்யக்கூடிய திறன் குறித்து நான் படித்துள்ளேன். நான் மருத்துவ கல்லூரியில் துணை பேராசிரியராக பணி புரிந்துள்ளேன். நான் நினைத்து இருந்தால் சுய நலமாக வாழ்ந்து இருக்கலாம். ஆனால், நான் நாட்டு மக்களுக்கு சேவையாற்ற எண்ணி பொதுவாழ்க்கைக்கு வந்தேன்.

திமுக ஆட்சி காலத்தில் மின்வெட்டால் பொதுமக்கள் அவதிப்படுவர். ஆனால், அதிமுக தொழில் வளர்ச்சிக்கு கடனுதவி வழங்கி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அயராது பாடுபட்டு வருகிறது. ஏழை எளிய மக்கள் பயன் அடைய வேண்டுமானால் 2ஜி வழக்கில் சிறைக்கு சென்ற கனிமொழி போன்ற ஊழல்வாதிகளை புறக்கணித்து இந்த மண்ணிற்கு சொந்தக்காரியான உங்களின் சகோதரி தமிழிசைக்கு தாமரை சின்னத்தில் வாக்களித்து, என்னை வெற்றி பெறச் செய்யுங்கள்” என அவர் பேசியுள்ளார்.