பச்சை சட்ட போட்ட பெங்களூர் அணி! புதிய சாதனை செய்த விராட் கோலி!

ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் டெல்லி கேபிடலஸ் அணியும் விளையாடி வருகின்றன. இதுவரை விளையாடிய ஐந்து போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ள பெங்களூர் அணி முதல் வெற்றியை இன்றாவது பெற்றுவிட வேண்டும் என்ற நோக்கத்தில் களமிறங்கியுள்ளது.

டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இரண்டு அணிகளிலும் கடந்த ஆட்டங்களில் விளையாடிய அதே அணியே இந்த ஆட்டத்திலும் எவ்வித மாற்றம் இல்லாமல் ஆடியது. பெங்களூரு அணியில் சீருடையின் நிறம் மட்டும் மாற்றப்பட்டுள்ளது. சிவப்பு கருப்பிலிருந்து அவர்களின் நிறம் ஆனது பச்சை நிறத்திற்கு இன்று மாறியுள்ளது.

அதன்படி பெங்களூர் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலியும், பார்த்திவ் படேலும் களமிறங்க கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய பார்த்திவ் படேல், 9 பந்துகளில் 9 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பிறகு வந்த வீரர்கள் ஒவ்வொருவராக ஆட்டமிழந்து வெளியேறினார்கள். ஒரு முனையில் விராட் கோலி மட்டும் வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தார். அவர் பேட்டிங் செய்யும் வாய்ப்பே அதிகம் வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏபிடி வில்லியர்ஸ் 16 பந்துகளில் 17 ரன்களும், மார்கஸ் ஸ்டோனிஸ் 17 பந்துகளில் 15 ரன்களும் மொயின் அலி 18 பந்துகளில் 32 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். 15 ஓவர்கள் வரை விராட் கோலி மொத்தம் 27 பந்துகள் மட்டுமே பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுவரை 26 பந்துகளில் 26 ரன்கள் எடுத்த விராட் கோலி இறுதியில் இரண்டு சிக்சர்கள் அடித்த திருப்தியுடன் 33 பந்துகளில் 41 ரன்களுடன் நடையை கட்டினார்.

அதன் பிறகு வந்த அக்ஷதீப் நாத் மட்டும் 19 ரன்கள் அடிக்க பவான் நேகி, டிம் சவுத்தி, சிராஜ், சாஹல் என அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேற பெங்களூர் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 20 ஓவர்கள் முடிவில் 149 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. இந்த ஆட்டத்தில் 150 ரன்கள் எடுத்தால் டெல்லி அணி வெற்றி பெற்று விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக அதிக ரன்களை அடித்த வீரர் என்ற பெருமையை இரண்டாவதாக இடத்திற்கு முன்னேறி விராட் கோலி பெற்றுள்ளார். ஏற்கனவே சென்னை அணியின் வீரர் சுரேஷ் ரெய்னா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான 803 ரன்களை எடுத்துள்ளார். இன்று கோலி டெல்லி அணிக்கு எதிராக எடுத்த 41 ரன்கள் மூலம் 802 ரன்கள் எடுத்து இரண்டவாது இடத்திற்கு வந்துள்ளார். மூன்றாவது இடத்தில் 796 ரன்களுடன் பஞ்சாப் அணிக்கு எதிராக தற்போதைய பஞ்சாப் அணியில் இருக்கும் கெயில் எடுத்துள்ளார்.

டெல்லி அணியின் வேகப்பந்துவீச்சாளர் ரபாடா தனது சிறப்பான பந்துவீச்சினை ஐபிஎல் வரலாற்றில் பதிவு செய்தார். அவர்கள் 21 ரன்களை மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார்.