வவுனியா – புளியங்குளம் பகுதியில் நேற்று இரவு யாழ்ப்பாணத்திலிருந்து கண்டி சென்ற பேருந்தின் பயணிகளின் அடையாள அட்டைகளும், அவர்களின் பயணப்பொதிகளும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது .யாழில் இருந்து நேற்று இரவு கண்டிக்கு சென்ற இ.போ.சபைக்கு சொந்தமான பேருந்து புளியங்குளம் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகிலுள்ள விஷேட அதிரடிப்படையினரின் முகாமிற்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள விஷேட சோதனை நடவடிக்கை நிலையத்தில் வழிமறிக்கப்பட்டுள்ளது.
இதன்போது பயணிகளை அவர்களது பயணப்பொதிகளுடன் இறங்கி வருமாறு தெரிவித்து, பயணப்பொதிகள் மற்றும் அடையாள அட்டைகள் பரிசோதிக்கப்பட்டு 15 நிமிடங்களின் பின் பேருந்து செல்ல அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
பேருந்தை வழிமறித்த விஷேட அதிரடிப்படையினரிடம் எதற்காக இவ்வாறு பயணிகளை கீழே இறக்கி சோதனை நடவடிக்கை மேற்கொள்கின்றீர்கள் என பயணிகள் வினவியதற்கு, இது தமது வழமையான சோதனை நடவடிக்கை என விசேட அதிரடிப்படையினர் கூறியுள்ளதாக தெரியவருகின்றது.
புளியங்குளம் படையினரின் சோதனை நடவடிக்கை முடிவடைந்த நிலையில், ஓமந்தை, நொச்சிமோட்டை பாலத்தில் கடமையிலிருந்த பொலிஸாரும் சோதனை நடவடிக்கைக்காக பேருந்தை வழிமறித்து உள்ளே சென்றுள்ளனர்.
இந்த நிலையில் அந்த பேருந்தின் பயணிகள், புளியங்குளம் முகாம் விசேட அதிரடிப்படையினர் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டதாக தெரிவித்ததை அடுத்து, பொலிஸார் சோதனை மேற்கொள்ளாமல் திரும்பிச் சென்றுள்ளனர்.