இலங்கையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் வங்கி லாக்கரில் 1.14 கிலோ ஹெராயின் போதைப்பொருள் வைத்திருந்த வழக்கில் அவருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கடந்த 2002ம் ஆண்டு சென்னையில் 44.8 கிலோ போதைப்பொருளை கைப்பற்றினார்கள்.
இதில் தொடர்புடைய நபர்களில் ஒருவரான இலங்கையைச் சேர்ந்த அசோக்குமார் 2009-ல் கைது செய்யப்பட்டார்.
அவருக்கு 11 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் சிறையில் அடைக்கப்பட்டார்.
அதேசமயம், 2009ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அசோக் குமார் சென்னை திருவான்மியூரில் உள்ள வங்கி லாக்கரில் வைத்திருந்த 1.14 கிலோ ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
இது தொடர்பாக அவர் மீது சென்னையில் உள்ள போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மற்றொரு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதன்படி அசோக்குமார் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 30 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் 3 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.