பிரதமர் மக்களிற்கு வழங்கிய செய்தி………..

கடன்களுக்கான வட்டி வீதத்தை 200 அடிமானப்புள்ளி (Basis Point) குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்கள் கடன்களைப் பெறுவதில் காணப்படும் சிக்கல்களைத் தீர்க்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவிருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க ​நேற்று அறிவித்தார்.

மத்திய வங்கியின் நாணயச் சபை மற்றும் வர்த்தக வங்கிகளின் தலைவர்களுடன் நடத்திய கூட்டத்தில் இது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதுடன், எதிர்வரும் சில வாரங்களில் கடன்களுக்கான வட்டி வீதம் குறைக்கப்படும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். அலரி மாளிகையில் ஊடகவியலாளர்களிடம் பிரதமர் நேற்று இந்த விசேட அறிவிப்பை வெளியிட்டார்.

கடன்களுக்கான வட்டி வீதம் அதிகமாக இருப்பதால் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதாக முறைப்பாடுகள் கிடைத்தன. இவ்வாறான நிலையில் கடன்களுக்கான வட்டிவீதம் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழு தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

இக்குழு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களினால் வழங்கப்படும் கடன்களுக்கான வட்டிவீதக் கட்டமைப்பில் குறைப்பு செய்யுமாறு பரிந்துரைத்துள்ளது.

எதிர்வரும் வாரங்களில் இது தொடர்பில் ஆராய்ந்து கடன்வட்டிவீதத்தைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். சித்திரை புத்தாண்டுடன் மக்களுக்கு சிறந்த செய்தியொன்று வரும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

மத்திய வங்கியின் நிதிச் சபை உறுப்பினர், பட்டய கணக்காளர் நிறுவனத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர், தனியார் வர்த்தக வங்கிகளின் பிரதம நிறைவேற்று அதிகாரிகளைக் கொண்ட குழுவே இது தொடர்பான பரிந்துரையை முன்வைத்துள்ளது.

கடன்களுக்கான வட்டி அதிகமாக இருப்பதால், பெரு நிறுவனங்களே கடன்களைப் பெறக்கூடியதாக இருக்கின்றன. சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கு வங்கிகளில் தற்காலிக மிகைப்பற்றினை (TOD) புதுப்பித்துக் கொள்ள முடியாத நிலைமை காணப்படுகிறது.

வட்டிவீதம் குறைப்பின் மூலம் 25 மில்லியன் ரூபாய் வரையில் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் மிகைப்பற்றினை இலகுவாகப் பெற்றுக் கொள்ள முடியும் எனப் பிரதமர் தெரிவித்தார்.

கடன்வட்டி வீதமானது 200 அடிமானப்புள்ளி (Basis Point) குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பில் அமைச்சர் கலாநிதி ஹர்ஷ.டி.சில்வாவும் விளக்கமளித்தார். பிராந்தியத்தில் அதிக கடன் வட்டி வீதத்தைக் கொண்ட நாடாக இலங்கை காணப்படுகிறது.

பணவீக்கத்தின் பின்னர் கடன்களுக்கான வட்டி வீதமானது இலங்கையில் 14.5 வீதமாகக் காணப்படுகிறது. பணவீக்கமானது 4 வீதமாகக் காணப்படுகிறது. பணவீக்கம் குறைந்தாலும் வட்டிவீதம் குறைவதில்லை. இதனால் கடன்களுக்கு அதிகவட்டி அறவிடப்படுகிறது.

றிப்பாக சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்கள் கடன்களைப் பெறுவதில் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

இதனைக் கருத்தில் கொண்டு ஒட்டமொத்த கடன் கட்டமைப்பை குறைப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டிருப்பதாகக் கூறினார்.

திறைசேரி பிணைமுறிகளை அடிப்படையாகக் கொண்டே வட்டிவீதங்கள் தீர்மானிக்கப்படுகின்றன. இலங்கையில் வைப்புக்களுக்கான வட்டிவீதத்துடன் ஒப்பிட்டே கடன்களுக்கான வட்டியும் தீர்மானிக்கப்படுகிறது.

இவ்வாறான நிலையில் ஒட்டுமொத்த கடன் கட்டமைப்பை குறைப்பதற்கும், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வட்டிவீதங்கள் குறித்த தீர்மானத்தை எடுப்பதற்கும் குழு பரிந்துரைத்துள்ளது.

மத்திய வங்கி வட்டி தொடர்பான கொள்கைத் தீர்மானத்தை எடுக்கும். எனினும் வர்த்தக வங்கிகள் சந்தை நிலவரத்துக்கு அமைய வட்டியைத் தீர்மானிக்கும் என்றும் அவர் கூறினார்.