அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ள போதும், சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச நாளை நாடு திரும்புவார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
திருமண நிகழ்வு ஒன்றில் பங்கேற்பதற்காக, கோத்தாபய ராஜபக்ச கடந்தமாத இறுதியில் அமெரிக்கா சென்றிருந்தார்.
அங்கு அவருக்கு எதிராக இரண்டு சிவில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்குகள் தொடர்பான அறிவித்தல்கள் வணிக வளாகம் ஒன்றின் வாகனத்தரிப்பிடத்தில் வைத்து சட்ட நிறுவனத்தின் அதிகாரிகளால் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் கோத்தாபய ராஜபக்ச தொடர்பான பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. அவர் திட்டமிட்டபடி, ஏப்ரல் 12ஆம் நாள் நாடு திரும்புவாரா என்ற கேள்விகளும் எழுந்தன.
இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்ட பின்னர், கோத்தாபய ராஜபக்சவிடம் இருந்து இதுவரை எந்தக் கருத்தும் வெளியாகவில்லை. அவருடன் தொடர்பை ஏற்படுத்தி கருத்தை அறிந்து கொள்ள ஊடகங்கள் முயற்சித்த போதும், அவரிடம் இருந்து பதில் கிடைக்கவில்லை.
இந்த நிலையிலேயே, திட்டமிட்டபடி நாளை கோத்தாபய ராஜபக்ச கொழும்பு திரும்புவார் என்றும், ராஜபக்ச குடும்பத்தினருடன் இணைந்து புத்தாண்டைக் கொண்டாடுவார் என்றும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறியுள்ளன.
அதேவேளை, டி.ஏ.ராஜபக்ச நினைவிடம் அமைக்கப்பட்டது தொடர்பான வழக்கில், பிரதான சந்தேக நபராக குற்றம்சாட்டப்பட்டுள்ள கோத்தாபய ராஜபக்ச, இந்த வழக்கு விசாரிக்கப்படும் சிறப்பு மேல் நீதிமன்றத்தின் அனுமதியுடனேயே அமெரிக்கா சென்றிருந்தார்.
மார்ச் 26ஆம் நாள் தொடக்கம், ஏப்ரல் 12ஆம் நாள் வரை- இரண்டு வாரங்களுக்கு மாத்திரமே, அவர் வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.
இந்த நிலையில், அவரது வெளிநாட்டுப் பயணத் தடை நாளை மறுநாள் மீண்டும் நடைமுறைக்கு வந்து விடும்.
அதற்கு முன்னர் அவர் நாடு திரும்பாது போனால், நீதிமன்ற அவமதிப்பு மற்றும் விசாரணையில் இருந்து தப்பிக்க முனைந்த குற்றச்சாட்டுகளை அவர் எதிர்கொள்ளுவார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.