சேலம் மாவட்டத்தில் தனியார் விடுதி ஒன்றில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை சேர்ந்த விஜயகுமார் என்பவர் அவருடைய மனைவி அனுராதா மற்றும் மகள்கள் ஆர்த்தி, ஆசிகா ஆகியோருடன் புதன்கிழமையன்று சேலம் மாவட்டத்திற்கு வந்துள்ளார்.
அங்கு பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதி ஒன்றில் அறை எடுத்து குடும்பத்துடன் தங்கியுள்ளார்.
நேற்று காலை அறையிலிருந்து பெண்கள் அலறும் சத்தம் கேட்டுள்ளது. இதனை கேட்டு பதறிப்போன ஊழியர்கள் வேகமாக சென்று கதவை திறந்துள்ளார்.
அப்போது விஜயகுமார், அவரது மனைவி அனுராதா, இரண்டாவது மகள் ஆசிகா ஆகியோர் சடலமாக கிடந்துள்ளனர். மூத்த மகள் ஆர்த்தி மட்டும் உயிருக்கு போராடி கொண்டிருந்துள்ளார்.
உடனே அவரை மீட்ட ஊழியர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் விரைந்து வந்த பொலிஸார் இறந்த 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில் கடன் தொல்லை தாங்க முடியாமலே குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்டிருப்பது தெரியவந்துள்ளது.