திருவள்ளூர் மாவட்டத்தில் பூட்டிய வீட்டினுள் தாயும், மகனும் கொலை செய்யப்பட்டு கிடந்த விவகாரத்தில் பக்கத்து வீட்டை சேர்ந்த பால் விற்பனை செய்யும் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருத்தணியை சேர்ந்த வனப் பெருமாள் என்பவர் இரவு நேர பாதுகாவலர் வேலைக்கு சென்றுவிட்டு நேற்றைக்கு முன்தினம் அதிகாலை வீடு திரும்பியிருக்கிறார்.
அப்போது அவருடைய மனைவி வீரலட்சுமி மற்றும் 10 வயது மகன் போத்திராஜ் ஆகியோர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டு சடலமாக கிடந்தனர்.
மேலும் அவர்களுடைய வீட்டில் இருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்ததும் கண்டறியப்பட்டது.
இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், சிசிடிவி காட்சிகளை கொண்டு பக்கத்து வீட்டை சேர்ந்த பால் வியாபாரி வெங்கடேசன் என்பவர் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், பகீர் தகவல்கள் வெளிவந்துள்ளன. பால் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் கொள்ளையடிக்க வெங்கடேசன் திட்டமிட்டுள்ளார்.
அதன்படி பக்கத்து வீட்டை சேர்ந்த வனப்பெருமாளின் வீட்டிற்குள் முகமூடி அணிந்தபடி நுழைந்த வெங்கடேசன், நகைகளை எடுத்துவருமாறு மிரட்டியுள்ளார்.
ஆனால் வெங்கடேசனின் குரலை கண்டுபிடித்த வீரலட்சுமி உதவி கேட்டு கூச்சலிடம் ஆரம்பித்துள்ளார். உடனே அங்கிருந்த இரும்புகம்பியை கொண்டு வீரலட்சுமியின் தலையில் ஓங்கி அடித்து கொலை செய்துள்ளார்.
அதேசமயம் தந்தைக்கு போன் செய்ய முயன்ற போத்திராஜை, அயர்ன்பாக்ஸ் வயரால் கழுத்தை நெரித்து கொலை செய்ததாகவும் ஒப்புக்கொண்டுள்ளான்.