இலங்கையில் சிங்கள தமிழ் புத்தாண்டை முன்னிட்டு எல்லோர் வீட்டிலும் பணியாரங்கள், பலகாரங்கள் செய்வதுண்டு.
குறிப்பாக கொண்டை பணியாரம், கெவுங், பாசிப்பயறு பணியாரம், பாசிப்பயறு உருண்டை, கொக்கிஸ் என்பன முக்கியமான தயாரிக்கப்படும் தின்பண்டங்களாகும்.
அந்தவகையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் பாசிப்பயறு உருண்டை பலகாரத்தினை எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- பாசிப்பயறு- 1 கிண்ணம்
- முந்திரி- 6
- பாதாம்- 8
- கொப்பரைத் தேங்காய்- 1
- கருப்பட்டி (அ) வெல்லம் – 1 1/4 கிண்ணம்
- முந்திரிப்பருப்பு ஒடித்து வறுத்தது -1 மேசைக்கரண்டி
- அரிசிமாவு-1 கிண்ணம்
- கோதுமைமாவு – 1 மேசைக்கரண்டி
- உப்பு – 1 சிட்டிகை
- எண்ணெய்- பொரித்து எடுக்க
- நெய் – 1 தேயிலைக்கரண்டி
- ஏலக்காய்- சிறிதளவு
செய்முறை
பாசிப்பயறை வெறும்வாணலியில் சிவக்க வறுத்து, மிக்சியில் ரவைபோல் அரைத்து, மேல்தோலைப் புடைத்து அல்லது ஊதி எடுக்கவும்.
முந்திரி, பாதாம் வெறும்வாணலியில் வறுத்து ரவைபோல அரைக்கவும்.
கொப்பரையைச் சிறுதுண்டுகளாக நறுக்கி, சிவக்க வறுத்து மிக்சியில் அரைத்து பாசிப்பயறு, பாதாம், முந்திரி இவற்றுடன் போட்டு நெய்விட்டுக் கலக்கவும்.
கருப்பட்டிப் பாகு வைத்து அதில் ஊற்றி நன்றாகக் கலந்து ஏலப்பொடி போட்டுச் சிறு உருண்டையாகப் பிடித்து வைக்கவும்.
அரிசி, கோதுமை மாவுடன் சிட்டிகை உப்புப் போட்டு பஜ்ஜி மாவுபோலக் கரைத்துக்கொண்டு, உருண்டைகளை அதில் தோய்த்து, எண்ணெய் காய்ந்ததும் போட்டுப் பொன்னிறமாக எடுக்கவும்.
தேவையானால் வறுத்த முந்திரிப்பருப்பு கலந்து உருண்டை பிடிக்கலாம். வெல்லம் போட்டும் செய்யலாம்.