சிறந்த சமூகத்தினை உருவாக்குவதில் முக்கிய பங்கினை வகிக்கக்கூடிய ஆசிரியர்கள், தற்கொலை செய்துகொள்ளும் நிலைமையை பா.ஜ.க அரசு, மாநிலத்தில் உருவாக்கியுள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசம்- பண்டா மாவட்டத்திலுள்ள கிராமத்தின் நடுநிலைப் பள்ளியில் பணியாற்றி வந்த ஆசிரியர் ராஜேஷ் குமார் படேல், கடந்த புதன்கிழமை தற்கொலை செய்துகொண்டார்.
இவருக்கு பள்ளியில் மூன்று மாத மதிப்பூதியம் வழங்கப்படாதமையால் பண நெருக்கடிக்கு உள்ளாகிய நிலையிலேயே தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையிலேயே ஆசியரின் தற்கொலை குறித்து பிரியங்கா காந்தி தனது டுவிட்டரில் மேற்கண்டவாறு இன்று சனிக்கிழமை பதிவேற்றியுள்ளார். அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
”பண்டா மாவட்டத்தில் இடம்பெற்ற சம்பவம் கவலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் தற்கொலை செய்துகொள்ளும் நிலைமையை தற்போதைய அரசு உருவாக்கியுள்ளது.
கடினமாக உழைக்கும் அவர்கள் கடும் நிதி நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்துள்ளனர். பா.ஜ.க ஆசிரியர்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றாமல் ஏமாற்றிவிட்டது. உத்தரப் பிரதேச மக்கள் இதை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்” என பிரியங்கா காந்தி குறிப்பிட்டுள்ளார்.