விருந்து சாப்பிட்ட ஒரு மணிநேரத்தில் உயிரிழந்த நடிகர் ரித்தீஷ்: கண்ணீர் சிந்திய அமைச்சர்

விருந்து சாப்பிட்ட ஒரு மணிநேரத்தில் நடிகர் ரித்தீஷ் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு ராமநாதபுரத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள வந்த நடிகர் ரித்தீஷ் மாரடைப்பால் உயிழந்தார்.

ரித்தீஷ் உயிரிழப்பதற்கு முன்னர் அமைச்சர் விஜயபாஸ்கருடன் இணைந்து விருந்து சாப்பிட்டுள்ளார்.

ராஜா சேதுபதி நகரில் உள்ள தனது வீட்டில் விஜயபாஸ்கருக்கு விருந்தளித்துவிட்டு அவரை மதுரைக்கு வழியனுப்பி வைத்துள்ளார்.

இந்நிலையில் திருப்புவனம் அருகே சென்று கொண்டிருந்த அமைச்சர் விஜயபாஸ்கருக்கு ரித்தீஷின் இறப்பு குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் தனது காரினை ஓரமாக நிறுத்தச் சொல்லிவிட்டு காரில் இருந்தபடியே கண்ணீர் விட்டு அழுதுள்ளார். இதன் பின் அங்கிருந்து உடனடியாக ராமநாதபுரம் வந்த அவர் ரித்தீஷின் உடலுக்கு கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினார்.

ஒன்றாக அமர்ந்து உணவு உண்ட கையின் ஈரம் கூட காயவில்லை. அதற்குள் இப்படி ஆகிவிட்டதே என அமைச்சர் விஜயபாஸ்கர் கண்கலங்கியுள்ளார்.