திருமண பேச்சுவார்த்தையின் போது கைகளை இழந்த காதலன்…

தமிழகத்தில் மாற்று அறுவை சிகிச்சையில் 2 கைகள் பொருத்தப்பட்ட வாலிபரை இளம் பெண் திருமணம் செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

திண்டுக்கல்லை சேர்ந்த நாராயணசாமி என்ற இளைஞர் கடந்த 2015-ல் சாலை விபத்தில் சிக்கிய நிலையில் இரண்டு கைகளையும் இழந்தார்.

இந்நிலையில் கடந்தாண்டு பிப்ரவரி மாதம் நாராயணசாமிக்கு வேறு ஓருவரின் இரண்டு கைகளை பொருத்தும் ஆப்ரே‌ஷன் நடந்தது.

டாக்டர் ரமாதேவி தலைமையிலான குழுவினர் 13 மணி நேரம் ஆப்ரே‌ஷன் செய்ததில் அவருக்கு வெற்றிகரமாக கைகள் பொருத்தப்பட்டது.

தற்போது அவர் அன்றாட பணிகளை சிரமமின்றி செய்து வருகிறார்.

இந்நிலையில் நாராயணசாமி தனது காதலி நதியாவை திருமணம் செய்து கொண்டார்.

இதுபற்றி நாராயணசாமி கூறுகையில், நதியாவும் நானும் கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து வந்தோம். நான் விபத்தில் சிக்கி இரு கைகளையும் இழந்ததால் அவரது பெற்றோர் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனால் நதியா பிடிவாதமாக இருந்தார். இறுதியில் அவரது பெற்றோரை சமாதானம் செய்தோம் என்றார்.

நதியா கூறுகையில், நாராயணசாமி விபத்தில் சிக்குவதற்கு 2 மாதங்களுக்கு முன்பு எங்கள் திருமணம் குறித்து எனது பெற்றோரிடம் பேசியபோது அவர்கள் திருமணத்துக்கு சம்மதித்தனர். பின்னர் அவருக்கு ஏற்பட்ட விபத்துக்கு பிறகு பெற்றோரை சமாதானப்படுத்துவது கடினமாக இருந்தது.

ஆனால் நாங்கள் உறுதியாக இருந்து திருமணம் செய்தோம் என்றார்.

தமிழ்நாட்டில் இரண்டு கைகள் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்ட முதல் நபர் நாராயணசாமி என்பது குறிப்பிடத்தக்கது.