சர்வதேச விமானங்கள் மற்றும் ஏனைய சேவைகளுக்காக இலங்கை விமான எல்லையை பயன்படுத்த அறிவிடப்படும் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இதற்கான அமைச்சரவை பத்திரம் எதிர்வரும் மாதம் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவை அமைச்சினால் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
சமகாலத்தில் வான் பரப்புக்குள் பிரவேசிக்கும் கட்டணத்தை குறைந்தளவில் அறவிடும் நாடாக இலங்கை உள்ளதாக அமைச்சர் அர்ஜுன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.
கடந்த பல தசாப்தங்களாக இலங்கையில் நிலவிய போர் சூழலே இந்த கட்டணத்தை குறைந்தளவில் முன்னெடுக்க காரணமாக அமைந்திருந்தது.
தற்போதைய சூழலில் இலங்கை போட்டிமிக்க நாடாகியுள்ளமையினால் கட்டணத்தை அதிகரித்து பாரிய வருமானத்தை ஈட்ட முடியும் என அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இலங்கை வான் எல்லையை பயன்படுத்துவதற்காக தற்போது விமானம் ஒன்றுக்கு 100 – 250 அமெரிக்க டொலர் அறிவிடப்படுகிறது. இந்நிலையில் விமானத்தின் அளவிற்கமைய கட்டணம் காணப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தற்போது இலங்கை வருடம் ஒன்றுக்கு 13 மில்லியன் அமெரிக்க டொலரை வருமானமாக பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணத்தை அதிகரிப்பதன் ஊடாக 26 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் ஈட்ட எதிர்பார்க்கப்படுகின்றது.
காலநிலை தகவல்கள் பறிமாற்றல், ரேடர் கட்டமைப்பு, பாதுகாப்பு மற்றும் விமான பயண போக்குவரத்திற்காக இந்த கட்டணம் அறவிடப்படுகின்றது.
தரையிறங்குவதற்கான கட்டணத்தையும் இரண்டு மடங்காக்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது A330 விமானம் ஒன்றுக்கு 3 மணித்தியாலங்களுக்கு 840 அமெரிக்க டொலர் அறவிடப்படுகின்றது. அதன் பின்னர் ஒவ்வொரு 3 மணித்தியாலத்திற்கும் ஒருமுறை நூற்றுக்கு 10 வீதம் வரை அதிகரிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.