தாய்ப்பால் குறைவாகச் சுரப்பதற்கு காரணம் என்ன தெரியுமா ???

தாய்ப்பால் குறைவாகச் சுரப்பது, சுரக்காமல் போவதற்கான காரணங்கள் என்னென்ன? அப்படிக் குறைந்தால் என்னென்ன சாப்பிட்டு சரிசெய்ய வேண்டும்? என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

தாய்ப்பால் என்பது ஒரு குழந்தையின் வருங்கால ஆரோக்கியத்துக்கான அஸ்திவாரமும் மட்டுமல்ல, அந்தக் குழந்தையின் உரிமையும். இப்படிப்பட்ட பேரமுதமான தாய்ப்பால் குறைவாகச் சுரப்பது, சுரக்காமல் போவதற்கான காரணங்கள் என்னென்ன? அப்படிக் குறைந்தால் என்னென்ன சாப்பிட்டு சரிசெய்ய வேண்டும்? என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

காரணங்கள்…

கர்ப்ப காலத்தில் நல்ல ஊட்டச்சத்தான உணவுகளைச் சாப்பிடாத பெண்களுக்குப் பிரசவத்துக்குப் பிறகு பால் சுரப்பு குறையும்.

புரோலக்டின் என்கிற ஹார்மோன் அளவு குறைந்தாலும் பால் சுரப்பு குறையும்.

சில பெண்களுக்குப் பரம்பரையாகவே தாய்ப்பால் சுரப்பு குறைவாக இருக்கும்.

சிசேரியன் பிரசவம் நடந்த இரண்டு, மூன்று நாள்கள் வரை சிலரால் எழுந்து உட்கார்ந்து குழந்தைக்குப் பாலூட்ட முடியாது. இதனால், குழந்தை வாய்வைத்து உறிஞ்சும் தூண்டுதல் இல்லாமல் போகும். இத்தகைய பெண்களுக்குப் பால் சுரப்பு குறைவாக இருக்கும்; அல்லது சுரக்காமலே போகலாம்.

டயபடீஸ், ரத்த அழுத்தம், காசநோய் உள்ளிட்ட நாள்பட்ட வியாதிகளுக்கு மருந்து சாப்பிடும் அம்மாக்களுக்கும் பால் சுரக்காமல் போகலாம்.

குறைபிரசவத்தில் குழந்தை பெற்ற பெண்களுக்கும், 40 வயதுக்கு மேல் பிள்ளை பெறும் அம்மாக்களுக்கும் பால் சுரக்காமல் போகும் வாய்ப்பு அதிகம்.

கர்ப்ப காலத்திலும் பிரசவத்துக்குப் பிறகும் சந்தோஷமின்றி மனப் பிரச்னையில் இருக்கும் அம்மாக்களுக்குத் தாய்ப்பால் சுரப்பு குறையும்.

பிரசவம் நடந்த அன்றே குழந்தைக்குப் பாலூட்ட ஆரம்பித்துவிட வேண்டும். சிசேரியன் செய்துவிட்டார்கள், எழுந்து உட்கார முடியவில்லை என இரண்டு நாள் கழித்து பாலூட்ட ஆரம்பித்தால், பால் சுரப்பதில் நிச்சயம் பிரச்னை வரும். குழந்தையும் அந்த இரண்டு நாள்களில் பவுடர் பாலுக்குப் பழகி, மூன்றாவது நாள் தாயின் மார்பில் பால் குடிக்காது.

சில பெண்கள் குழந்தை தூங்குகிறது, எழுப்ப வேண்டாம் என அதிக நேர இடைவெளியில் பாலூட்டுவார்கள். அவர்களுக்குப் பால் சுரப்பு குறைவாகும்.

குழந்தை குறைவான எடையில் பிறந்தால், தாய்ப்பாலை நன்கு உறிஞ்சிக் குடிக்க முடியாது. இதனாலும் பால் சுரப்பு குறைந்துவிடும்.

கர்ப்பமாக இருக்கும்போது 8 முதல் 12 கிலோ வரை எடை போடுவதுதான் ஆரோக்கியமான விஷயம். இந்தச் சமயத்தில் அதிக எடை போட்ட பெண்களும், தாய்ப்பால் சுரப்பு குறைவால் அவதிப்படுவார்கள்.

தீர்வுகள்…

பால் சுரப்பைத் தூண்டுவதற்கு லேக்டர் (Lactare), கேலக்ட் கிரான்யூல்ஸ் (Galact granules), சதாவரி ஆகிய மாத்திரைகளை அளிப்போம். இவை ஆயுர்வேத மருந்து என்பதால், பக்கவிளைவுகள் பற்றி பயப்படாமல் குழந்தை பெற்ற அம்மாக்கள் சாப்பிடலாம். ஆனால், இந்த மருந்துகளின் பெயர்களை படித்துவிட்டு, நீங்களாகவே வாங்கிச் சாப்பிடக் கூடாது. உங்கள் மகப்பேறு மருத்துவரிடம் ஆலோசனை பெற்று அவர் சொல்லும் அளவில் சாப்பிட வேண்டும்.