தாயின் கருவில் இருந்து இதயம் எப்படி உருவாகிறது?

தாயின் கர்ப்பப்பையில் கருவானது ஒரு தீக்குச்சியின் அளவு இருக்கும் போது, இதயம் உருவாகத் தொடங்குகிறது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

தாயின் கர்ப்பப்பையில் கருவுற்ற முட்டை (Zygote) ஓரளவு வளர்ச்சி அடையத் தொடங்கியதும் அதன் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு உறுப்பாக உருவாகிறது. கருவுற்ற முட்டையின் தலைப்பகுதிதான் (Cephalic end) இதயமாக உருப்பெறுகிறது.

தாயின் கர்ப்பப்பையில் கருவானது ஒரு தீக்குச்சியின் அளவு இருக்கும் போது, இதயம் உருவாகத் தொடங்குகிறது. இந்நிலையில் இதயத்தின் முன்னோடியான முதிரா அமைப்பானது ஒரு தீக்குச்சியின் தலைப்பகுதியில் உள்ள செந்நிறமருந்தின் அளவில் இருக்கும். இதயமாக உருவாக வேண்டிய இந்த முதிராத அமைப்புகள் முதன்முதலாக இரண்டு மெல்லிய குழல்களாகத் தோன்றுகின்றன. பிறகு, இந்த இரண்டு மெல்லிய குழல்களும் இணைந்து ஒரே குழலாக உருமாற்றம் பெறுகின்றன.

அதன்பிறகு இந்தக் குழலானது நன்கு வளர்ச்சி பெறத்தொடங்குகிறது. நன்கு வளர்ச்சியடைந்த பிறகு இந்தக் குழல் போன்ற அமைப்பானது (S) என்ற ஆங்கில எழுத்து வடிவில் உருமாற்றம் அடைகிறது. கருவுற்ற மூன்றாவது வாரத்தில் இதயம் இந்த நிலையை அடையும். இந்நிலையில் முதிராத குழல் பகுதியின் உடல் பகுதியானது (Truncus) நன்கு வளரத் தொடங்குகிறது. இதயக் குழலின் உடல் பகுதியானது, முழுமையாக வளர்வதற்கு முன்னரே இதயத்தின் உள் அறைகளைப்பிரிக்கும் தடுப்புச் சுவர்கள் (Septal) உருவாகத் தொடங்குகின்றன.

முதிர்ச்சி அடையாத இதயக் குழலின் உடல் பகுதியானது நன்கு வளர்ந்து மகா தமனியாகவும் (Aorta) நுரையீரல் தமனியாகவும் தனித்தனியாகப் பிரிக்கின்றன. இதயம் இயங்குவதற்குப் பக்கபலமாக ஓர் மின் அமைப்பும் அதனுள் செயல்படுகிறது. கருவுற்ற ஆறாவது வாரத்தில் இதயத்தின் மின்அமைப்புகள் (Electrical apparatus) உருவாக ஆரம்பிக்கின்றன. இதில் வியப்புக்குரிய விஷயம் என்ன தெரியுமா? இதயத்தின் மின் அமைப்புகள் உருவாதற்கு முன்னரே இதயமாவது துடிக்க தொடங்கிவிடுகிறது.

கருவுற்ற மூன்றாவது வாரத்தில் இதயத்தின் தடுப்புசுவர்களும் நான்கு வெளிப்புற சுவர்களும் முழுமையாக உருவாகின்றன. இதயம் மற்றும் அதற்குள் இருக்கும் ரத்தக் குழாய்களின் வளர்ச்சி கருவுற்ற மூன்றாவது வாரம் தொடங்கி ஆறாவது வாரம் வரை நடைபெறுகிறது. இதயத்தின் ரத்த ஓட்டத்துக்கு உறுதுணையாக இருக்கும் பலவகையான வால்வுகள் அனைத்தும் இதயத்தின் உருவாக்கத்திலும், வளர்ச்சியிலும் குழல் தோன்றுதல், குழல்கள் இணைதல், இதயக்குழல் சுழலுதல், தடுப்புச்சுவர்கள் உருவாதல், ரத்தக்குழாய்கள் தோன்றுதல், ரத்தக் குழாய்கள் சுருங்குதல் போன்றவை மிகவும் முக்கியமான கட்டங்களாகக் கருதப்படுகின்றன.