சென்னை: “ஸ்டாலினை நம்பி வாக்களிக்க வேண்டாம். ஸ்டாலினை நம்பி வாக்களித்தால் மக்கள் ஏமாந்துதான் போவார்கள்” என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்தார். சென்னையில் இன்று தேமுதிக, அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்தார். அதன்படி முதலாவதாக மத்திய சென்னையில் பாமக வேட்பாளர் சாம்பாலை ஆதரித்து ஓட்டு சேகரித்தார். ஆனால் பிரச்சார வேனில் இருந்தபடியே இரு பக்கமும் தொண்டர்களை காட்டி விஜயகாந்த் கையை அசைத்தார். வேனுக்கு மேலே வேட்பாளர் சாம்பால் கைகூப்பி வணங்கியபடியே வந்தார். ஒரு வார்த்தைகூட மத்திய சென்னையில் விஜயகாந்த் பேசாததால் தொண்டர்கள், பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
ஆர்ப்பரித்த தொண்டர்கள் அதேபோல வடசென்னையில் பிரச்சார வேன் நுழைந்ததும் அந்த தொகுதி தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜ் வேனில் ஏறிக் கொண்டார். வேனுக்குள் முரசு சின்னத்தை மக்களிடம் காண்பித்தவாறே சென்ற விஜயகாந்த்தை கொளத்தூர் பகுதியில் செய்தியாளர்கள் சூழ்ந்து கொண்டனர். அப்போது மைக்கை வாங்கி விஜயகாந்த் பேச ஆரம்பத்தார். உடனே தொண்டர்கள் விண்ணை பிளக்கும்வண்ணம் ஆர்ப்பரித்து சத்தமாக முழக்கமிட்டனர்.
ஏமாந்து போவார்கள் பிறகு சுற்றி இருந்தவர்களை பார்த்து “கேட்குதா.. எல்லாருக்கும் கேக்குதா.. இந்த பக்கம் இருக்கறவங்களுக்கு கேட்குதா? நீங்கள் எல்லாருமே கொட்டும் முரசு சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். ஸ்டாலினை நம்பி வாக்களிக்க வேண்டாம். ஸ்டாலினை நம்பி வாக்களித்தால் மக்கள் ஏமாந்துதான் போவார்கள்.
முரசுக்கு ஓட்டு போடுங்க “இதோமேல நிக்கறாரே.. மோகன்ராஜ்.. நல்ல மனிதர். அவருக்கு முரசு சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். கொட்டும் முரசுக்கு ஓட்டுப் போட மறந்து விடாதீங்க. போடுவீங்களா.. போட மறந்துடாதீங்க.. மக்களே.. மறந்துடாதீங்க ” என்றார்.
தெளிவற்ற வார்த்தை பின்னர் துரைமுருகன் வீட்டில் பணம் கைப்பற்றப்பட்டது குறித்தும், திமுக தலைவர் ஸ்டாலினும் குறித்தும் விஜயகாந்த் ஏதோ சொல்ல முயன்றார். ஆனால் வார்த்தை சரியாக புரியவில்லை. இப்படி தெளிவற்ற முறையில் விஜயகாந்த் சிரமப்பட்டு பேசியதால் தேமுதிக தொண்டர்கள் வேதனை அடைந்தனர்.
மறந்துடாதீங்க அதேபோல மூலக்கடை பகுதியிலும் விஜயகாந்த் பேசினார். பெரவள்ளூரில் பேசியதைப் போலவே இங்கும் பேசினார். கூடவே என்னை மறந்துடாதீங்க என்றும் உருக்கமாக அவர் வேண்டுகோள் வைத்தார்.