சாப்பாட்டில் முடி கிடந்தால் உண்மையிலே என்ன அர்த்தம்?

உணவுப் பொருள்களைச் தவிர்த்து வேறு எந்தவித பொருளும் உணவில் கலந்தால் உணவு விரைவில் கெட்டுப் போகும். அதேபோன்று தான் உணவில் முடி கிடப்பதும் உடல் சார்ந்தது மட்டுமின்றி நுண்ணுயிரியல் சார்ந்த மாசுபாட்டையும் உணவில் ஏற்படுத்தும் தன்மை கொண்டது.

வீட்டிலோ வெளியில் விருந்து சாப்பிடப் போகும்போதோ, தடபுடலாக அப்பளம், பாயசம் என வகை வகையாக வைத்திருந்தால், எப்படியாவது ஒரு பிடி பிடித்துவிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டே சந்தோஷமாக இலையில் கையை வைப்போம். அந்த சமயம் பார்த்து சாப்பாட்டுக்குள் ஒளிந்திருந்த ஒரு முடி வெளியே வந்தால் எப்படி இருக்கும். நம்முடைய முகம் மாறிவிடும். சாப்பிட வேண்டும் என்ற முழு மனநிலையும் பாழாகி விடுமல்லவா? இதுவே அருகில் பெரியவர்கள் யாராக இருந்தால், சாப்பாட்டில் தலைமுடி இருந்தா உறவு நீடிக்கும்மா நீ தூக்கிப் போட்டுட்டு சாப்பிடு என்று சொல்லக் கேட்டிருப்போம்.

உடல்நலக்கேடு
சாப்பாட்டில் முடி இருந்தால் உறவு நீடிக்குமோ இல்லையோ அது ஒருபோதும் உடல் நலத்தைக் காக்காது. அது உடல் நலக்கேட்டைத் தான் உண்டாக்கும்.

சின்ன சின்ன கற்கள், ஆணி போன்ற உலோகங்களா்ல ஆன துண்டுககள், பூச்சிகள், பல்லி போன்றவை அடிக்கடி உணவில் விழுந்துவிடுவது வழக்கம். இருந்தாலும் கூட உலக அளவில் உணவில் அதிகமாக விழுந்து கிடக்கும் பொருள் என்றால் அது முடி தான் என்று கூறப்படுகிறது.

புரோட்டீனால் ஆனது
சராசரியாக ஒரு ஆளுக்கு தினமும் 50 முதல் 100 முடி வரை உதிர்ந்து கொண்டே இருக்கும். மனிதனின் முடியானது கெரட்டின் என்னும் புரதத்தினால் ஆனது. இந்த புரதம் தான் நம்முடைய தோல் மற்றும் நகப்பகுதிகளின் மேல் புறத்தில் இருக்கும். கெரட்டின் புரதத்தால் முடி ஆனது என்றாலும் கூட, அது நமக்கு நேரடியாகப் பெரிய ஆபத்தை விளைவிக்காது என்றாலும் கூட, அது நாம் உண்ணும் உணவை மாசுபடுத்திவிடும்.

ஃபாரின் பாடி
நாம் சாப்பிடக் கூடாத பொருள்கள் மற்றும் உணவுப் பொருள்கள் தவிர வேறு எந்த பொருள் உணவில் கலந்திருந்தாலும் அது நம்முடைய உடலுக்கு ஒவ்வாத ஒன்றாகவும் ஃபாரின் பாடி (forgein body) என்றும் அழைக்கப்படுகிறது. இதற்கு சூழலுக்கு ஒவ்வாத பொருள் என்று அர்த்தம்.

உணவில் நுண்ணுயிரிகள்
உணவுக்குள் கிடக்கின்ற உணவுப் பொருளைத் தவிர வேறு எவையும் உணவைக் கெடுத்துவிடும். உணவில் முடி கிடப்பது உணவுக்குள் உடல் நலத்தைக் கெடுப்பதோடு நுண்ணுயிரியல் மாற்றத்தை ஏற்படுத்தும். உணவில. இருக்கும் முடி உணவில் நுண்ணுயிரிகளை ஏற்படுத்தும்.

பதப்படுத்தப்பட்ட உணவுகள், மாதக் கணக்கில் வைத்துப் பயன்படுத்தும் ஊறுகாய் போன்றவற்றில் முடி இருந்தால் அவை நோய்க் கிருமிகளை வழிவகுக்கும் என்று இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) எச்சரிக்கை விடுத்துள்ளது.

உணவில் முடி
வெறும் முடிக்கே இந்த நிலைமை என்றால் அந்த முடியில் தேய்ந்திருக்கும் எண்ணெய், வியர்வை, முடியில் தேய்த்திருக்கும் வேறு மருந்துகள், கெமிக்கல்கள் கலந்த ஷாம்பு, ஹேர் டையில் கலந்திருக்கும் கெமிக்கல்கள் போன்றவற்றால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். இது நிச்சயம் உணவிலும் கலந்து உங்களுக்கு அருவருப்பை மட்டுமல்ல அழற்சியையும் உண்டாக்கும்.

உடலில் நச்சுக்கள்
நாம் சாப்பிடுகின்ற பொழுது சாதாரணமாக முடி வயிற்றுக்குள் சென்று விட்டால் அது அயல்பொருள் என்பதால் தானாகவே நமது உடல் அதை வெளியேற்றிவிடும். ஆனால் அந்த முடியில் ஏதேனும் தொற்றுக்கள் இருந்தால் அது உடலில் நச்சுக்களைச் சேர்த்துவிடும்.

விளைவுகள்
அப்படி நம்முடைய உடலில் சேருகின்ற நச்சுப் பொருள்கள் வயிற்றுப் போக்கு போன்றவற்றை ஏற்படுத்தும். அப்படி வயிற்றுப் போக்கு ஏற்படுகின்ற பொழுது, அதை நிறுத்தும் முயற்சியில் நீங்கள் ஈடுபடக் கூடாது. அப்படி வயிற்றுப்போக்கை நிறுத்த நினைத்தால் முடி வெளியேறாமல் போய்விடும். வயிற்றிலேயே தங்கிவிடும். வயிற்றுப் போக்கு நிற்காவிட்டால் உடலில் நீர்ச்சத்து இழப்பு ஏற்படும். உடல் சோர்வு உண்டாகும். எனவே வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுக வேண்டும். பெரும்பாலும் உடலுக்குள் செல்லுகின்ற ஓரிரு முடிகள் உடலில் பெரிய விளைவுகளை ஏற்படுத்தாது. இதற்காக வாய்க்குள் விரலை விட்டு முடியை வெளியேற்ற வேண்டும் என்று தேவையில்லாத முயற்சியில் ஈடுபடாமல் இருப்பது நல்லது.

தர நிர்ணய விதி
இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் வரையறைப்படி, உணவுப் பொருள்கள், பாட்டில், கேன்களில் உள்ள தண்ணீர், குளிர்பானங்கள், ஊட்டச்சத்து உணவுகள் போன்றவை உணவு என்னும் வரையறைக்குள் கொண்டு வரப்பட்டடதால், இந்த பொருள்கள் எதிலும் தலைமுடி இருக்கக்கூடாது என்பது விதியாக இருக்கிறது.

அதனால் தான் ஹோட்டல்கள், விடுதிகளில் சமையல் செய்கின்றவர்கள் தலைக்கு வலை போன்ற தொப்பியை அணிந்து கொள்கிறார்கள். மீசை, தாடிக்கும் கூட இப்போதெல்லாம் தொப்பி வந்துவிட்டது. ஹோட்டல்களுக்கு இது சாத்தியம் தான். ஆனால் வீட்டில் ஒவ்வொரு முறையும் உணவைக் கையாளுகின்ற பொழுது, தொப்பி அணிந்து கொள்ள முடியுமா?.