எதிரிகளை இலக்கை அழிக்கவல்ல நிர்பய் ஏவுகணை..

திரிகளின் இலக்கை அழிக்கவல்ல ‘நிர்பய்’ ஏவுகணை ஒடிசாவில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது.

இந்திய இராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறையான டி.ஆர்.டி.ஓ. பல்வேறு சக்திவாய்ந்த ஏவுகணைகளை தயாரித்து வருகிறது.

கடல், ஆகாயம் மற்றும் தரையில் இருந்து சுமார் ஆயிரம் கிலோமீட்டர் தூரம் வரை பாய்ந்து சென்று எதிரிகளின் இலக்கை குறிதவறாமல் தாக்கி அழிக்கவல்ல ‘நிர்பய்’ ஏவுகணை ஒடிசாவில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.

ஒடிசா மாநிலத்தின் பாலசோர் கடல்பகுதியில் உள்ள ஏவுதளத்தின் மூன்றாவது முனையத்தில் இருந்து இன்று காலை 11.44 மணிக்கு ஏவப்பட்ட ‘நிர்பய்’ ஏவுகணை 42 நிமிடம் 23 வினாடிகள் தொடர்ந்து பறந்து, நிர்ணயிக்கப்பட்டிருந்த இலக்கை வெற்றிகரமாக தாக்கி அழித்ததாக இந்திய இராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விண்ணில் அதிக உயரத்தில் பறந்து தாக்குவதுடன் தரைமட்டத்தில் சுமார் 100 மீட்டர் உயரத்தில் பறந்து இலக்கை மணிக்கு சுமார் 865 கிலோமீட்டர் வேகத்தில் தாக்கும் திறன் ‘நிர்பய்’ ஏவுகணைக்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.