திருமணமான 6 நாளில் புதுப்பெண் மர்ம மரணம்!

மதுரை மாவட்டம் மேலூர் அருகே திருமணமான 6 நாளில் புதுப்பெண் மர்மமான முறையில் இறந்தார். இதுகுறித்து கொட்டாம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த கொட்டாம்பட்டி அருகே உள்ள எம்.வல்லாளப்பட்டியை சேர்ந்தவர் ஒய்யப்பன். இவரது மகள் ராஜலட்சுமி (வயது24).

இவருக்கும், சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள எஸ்.வி. மங்கலத்தைச் சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் வீரபாண்டி(27) என்பவருக்கும் கடந்த 10-ந்தேதி திருமணம் நடைபெற்றது.

திருமணத்தற்கு பின் புதுப்பெண் ராஜலட்சுமி எதிர்கால சந்தோஷங்களுடன் கணவர் வீட்டுக்கு சென்றார்.

இந்த நிலையில் நேற்று ராஜலட்சுமியை அழைத்துக் கொண்டு வீரபாண்டி வல்லாளப்பட்டி வந்தார். அங்கு மாமனார் வீட்டில் மனைவியை விட்டு சென்று விட்டார். அவர் சென்ற சிறிது நேரத்தில் ராஜலட்சுமி வாயில் நுரைதள்ளியபடி மயங்கி விழுந்தார். இதனால் பெற்றோர் பதட்டம் அடைந்தனர்.

மகளை உடனடியாக ஆஸ்பத்திரிக்கு தூக்கிச் சென்றனர். ஆனால் வழியிலேயே ராஜலட்சுமி பரிதாபமாக இறந்தார். அவர் எப்படி இறந்தார்? என்பது மர்மமாக உள்ளது.

இதுகுறித்து கொட்டாம்பட்டி போலீசில் ஒய்யப்பன் புகார் செய்துள்ளார். அதில், தனது மகள் சாவில் மர்மம் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மர்மமாக இறந்த ராஜலட்சுமி உடல் பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.