குறைபிரசவத்தை முழுமையாக தடுக்க முடியாது என்றாலும் எச்சரிக்கையாக இருந்தால் அதை தள்ளி போடலாம். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
பொதுவாக கருவின் வயது 40 வாரங்கள் என வரையறுக்கபட்டுள்ளது. ஆனால் இந்த 40 வாரங்கள் முற்று பெறாமல் 37 வாரங்களிலோ அல்லது அதற்கு முன்போ பிரசவம் தொடங்கி விட்டால் அதை குறைமாதபேறு அல்லது குறைபிரசவம் என சொல்கிறார்கள். கர்ப்பிணி பெண்களில் குறைந்தது 10% பேருக்கு இந்த குறைமாத பேறு உண்டாகிறது.
குறைபிரசவம் எதனால் ஏற்படுகிறது?
குறைபிரசவம் உண்டாவதற்கான சரியான காரணம் இது தான் என வரையறுக்க முடிவதில்லை. சில சமயம் பெண்களின் இயக்குநீர்கள், நச்சுக்கொடி, வயிற்றில் வளரும் குழந்தையின் நிலை போன்றவை இதற்கு காரணங்களாக இருக்கலாம் என சொல்லபடுகிறது. கீழ்கண்ட காரணங்களில் ஏதாவது ஒன்று குறைமாதபேறு உண்டாவதற்கு காரணமாக சொல்லபடுகிறது.
1. கர்ப்ப பையின் வாய்ப்பகுதி பலமில்லாமல் இருந்தால்
2. கர்ப்ப காலத்தின் தொடக்க காலத்தில் ரத்த போக்கு உண்டாகியிருந்தால்
3. இரட்டை குழந்தைகள் வயிற்றில் இருந்தால்
4. சர்க்கரை மற்றும் உயர் ரத்த அழுத்தம் இருந்தால்
5. கர்ப்ப காலத்தில் சரியான சத்து மிகுந்த உணவை உட்கொள்ளாமல் இருந்தால்.
குறைபிரசவம் ஏற்பட போகிறது என்பதை எவ்வாறு கண்டறிவது?
குறைமாதபேறு ஏற்படபோகிறது என்பது முன்பே தெரிந்துவிட்டால் மருத்துவரை அணுகி உங்களின் பிரசவத்தை சில நாட்களுக்கு
ஒத்தி வைக்கலாம். கீழ்காணும் இந்த அறிகுறிகள் குறைமாதபேறு ஏற்படபோகிறது என்பதன் முன்னறிவிப்பாகும்.
1. பிறப்புறுப்பிலிருந்து நீரானது ரத்தகசிவுடன் வெளியாவது
2. அளவுக்கு அதிகமான அழுத்தமானது இடுப்பு மற்றும் அடிவயிற்றில் ஏற்படுவதால்
3. பிரசவ காலத்தில் ஏற்படும் கர்ப்பபை சுருங்கி விரியும் நிகழ்வு இப்போதே ஏற்படும்.
குறைபிரசவத்தை எவ்வாறு தடுக்கலாம்?
குறைபிரசவத்தை முழுமையாக தடுக்க முடியாது என்றாலும் எச்சரிக்கையாக இருந்தால் அதை தள்ளி போடலாம். உங்கள் மகபேறு மருத்துவரை குறிப்பிட்ட இடைவெளிகளில் சந்திப்பது நல்லது. இதற்கு முன்பே குறைமாத பேறு ஏற்பட்ட பெண்களுக்கு மருத்துவர் ப்ரோஜெஸ்டிரான் ஊசியை போடுவதன் மூலம் குறைமாத பேறு ஏற்படாமல் தடுப்பார்.
மேலும் கனமான பொருட்களை கையாள கூடாது, சிரமம் நிறைந்த வேலைகளை செய்யகூடாது மேலும் உடலுறவு கொள்ள கூடாது. இவற்றை கடைபிடித்தால் குறைபிரசவத்தை தள்ளி போடலாம்.