அதிக நேரம் தூங்குவதும், குறைந்த நேரம் தூங்குவதும் இதய நோய் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. தினமும் இரவு ஆறு மணி முதல் எட்டு மணி வரை தூங்கவேண்டும். இல்லாவிட்டால் இதய நோய் பிரச்சினைகளும், பக்கவாத பாதிப்பும் ஏற்படும் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 35 வயது முதல் 70 வயதுக்கு உட்பட்ட 1 லட்சத்து 16 ஆயிரத்து 632 பேர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். இவர்கள் அனைவருமே சரியாக தூக்கம் இல்லாமல் அவதிப்படுபவர்கள்.
கனடாவில் உள்ள மெக் மாஸ்டர் பல்கலைக்கழகம் இந்த ஆய்வை மேற்கொண்டிருக்கிறது. ஆய்வு குழுவில் இடம்பெற்ற மாணவர், சுங்ஷி வாக்ன், ‘‘தூங்கும் நேரத்தை ஆறு மணி முதல் எட்டு மணி வரை கணக்கிட்டு ஆய்வு மேற்கொண்டோம். அந்த நேரத்தை கடந்து அதிகம் தூங்குபவர்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். இதய நோய் பாதிப்புக்கு உள்ளாகி மரணத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலைமையும் ஏற்பட்டுள்ளது’’ என்றார்.
ஆய்வின் முடிவில் பரிந்துரைக்கப்பட்ட நேரத்தை கடந்து எட்டு முதல் ஒன்பது மணி வரை தூங்குபவர்களுக்கு 5 சதவீதம் நோய் பாதிப்பு அதிகரிக்கும் என்பது கண்டறியப்பட்டுள்ளது. தினமும் ஒன்பது முதல் 10 மணி நேரம் தூங்குபவர்களுக்கு இதய நோய் பாதிப்பு 17 சதவீதம் அதிகரிக்கக்கூடும் என்பதும் தெரியவந்துள்ளது. 10 மணி நேரத்திற்கும் மேலாக தூங்குபவர்களுக்கு இதய நோய் பாதிப்பு 41 சதவீதம் அதிகமாக இருக்கும். அதுபோல் ஆறு மணி நேரம் அல்லது அதற்கும் குறைவாக தூங்குபவர்களுக்கு 9 சதவீதம் நோய் பாதிப்பு அதிகரிக்கும் என்பதும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.