வெந்தயம் பல்வேறு சத்துக்களை தன்னகத்தே கொண்டிருக்கிறது. இந்தியாவின் பல பகுதிகளிலும் வெந்தயத்தை தங்களது அன்றாட சமையலுக்கு பயன்படுத்துகிறார்கள்.
பழங்கால மருத்துவ முறையிலும் வெந்தயம் முக்கியப் பங்கு வகிக்கிறது. அதனுடைய விதைகள்,இலை எல்லாமே மிகவும் பயனுள்ளதாகும். சாதரண விதைகளை விட அவற்றை முளைகட்டிச் சாப்பிடுவதால் இரட்டிப்பு பலன்கள் கிடைக்கிறது. முதல் நாள் இரவில் ஒரு ஈரத் துணியில் வெந்தயத்தை போட்டு கட்டி வைத்திட வேண்டும்.
மறு நாள் காலை எடுத்துப் பார்த்தால் வெந்தயத்தில் முளைவிட்டிருக்கும். இவற்றை அப்படியே கூட எடுத்துச்சாப்பிடலாம்.இதனால் ஏராளமான நன்மைகள் நமக்கு கிடைக்கிறது.
சத்துக்கள்
முளைகட்டிய வெந்தயத்தில் அதிகப்படியான விட்டமின்சி,ப்ரோட்டீன்,நியாசின்,பொட்டாசியம், இரும்புச்சத்து மற்றும் ஆல்கலாய்ட்ஸ் நிறைந்திருக்கும். அதோடு ஈஸ்ட்ரோஜனாக கருதப்படும் டயோஸ்ஜெனினும் அதிகமாக காணப்படுகிறது.
சர்க்கரை நோயைக் குறைக்கும்
சர்க்கரை நோயாளிகளுக்கு முளைகட்டிய வெந்தயம் மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்திடும்.வெந்தயத்தில் இருக்கும் மூலக்கூறுகளால் உடலில் இன்ஸுலின் சுரப்பு அதிகரிக்கும் அதோடு ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளும்.
குறிப்பாக டைப் 2 வகை சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதனைச் சாப்பிடலாம். தொடர்ந்து 24 வாரங்கள் வரை முளைகட்டிய வெந்தயத்தை சாப்பிட்டு வர ரத்தச் சர்க்கரை அளவு குறைந்திடும். வெந்தயத்தில் இருக்கும் அமினோ அமிலம் இன்சுலின் சுரப்பை துரிதப்படுத்துகிறது.
எடை குறைக்கும்
முளைகட்டிய வெந்தயத்தில் polysaccharide அதிகமாக இருக்கிறது. இவை நிறைவாக சாப்பிட்ட உணர்வைத் தருகிறது. இதனால் அதிகப்படியான உணவு சாப்பிடுவது தவிர்க்கப்படும். அதோடு முளைகட்டிய வெந்தயத்தில் 75 சதவீதம் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் இருக்கின்றன.
இவை நாளுக்கு தேவையான எனர்ஜியை கொடுத்திடும். உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இதனை தொடர்ந்து சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைத்திடும்.
இதயம்
முளைகட்டிய வெந்தயம் இதயத்திற்கு மிகவும் நல்லது. இதனை தினமும் சாப்பிட்டு வந்தால் இதயம் தொடர்பான பிரச்சனைகளை தவிர்த்திடலாம். இதனை தொடர்ந்து சாப்பிடுவதால் உடலில் கொலஸ்ட்ரால் சேராமல் பார்த்துக் கொள்ளும். இதனால் இதயத்தின் செயல்பாட்டில் எவ்வித இடர்பாடுமின்றி தொடரும்.அதோடு இதிலிருக்கும் பொட்டாசியம் நம் உடலில் இருக்கும் சோடியம் அளவை சீராக்கும். இதனால் ரத்த அழுத்தம் முறையாக பராமரிக்கப்படும்.
வைரஸ்
முளைகட்டிய வெந்தயம் வைரஸ் தொற்று ஏற்படாமல் பாதுகாக்கும். குறிப்பாக காய்ச்சல்,தலைவலி போன்றவற்றை உடனடியாக குணப்படுத்தக்கூடிய ஆற்றல் கொண்டுள்ளது.
செரிமானம்
ஆரம்ப காலங்களிலிருந்தே வெந்தயத்தை செரிமானம் தொடர்பான மருத்துவத்திற்கே அதிகம் பயன்படுத்தி வந்திருக்கின்றனர். முளைகட்டிய வெந்தயத்தில் அதன் பலன்கள் இரட்டிப்பாக கிடைக்கும்.வயிறு பொருமல்,அஜீரணம்,வயிற்று வலி,வயிற்றுப் போக்கு போன்ற பிரச்சனைகள் இருப்பவர்களுக்கு உடனடித் தீர்வு கொடுக்கும்.