இலங்கையில் இன்று காலை இடம்பெற்ற குண்டுவெடிப்புகளை ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த தற்கொலைக் குண்டுதாரிகளே மேற்கொண்டுள்ளதாக ஆரம்பக் கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
கொழும்பில் ஷங்ரி-லா விடுதியில் நேற்று இரண்டு பேர் 616ஆவது இலக்க அறையில் தங்கியுள்ளனர்.
குறித்த இரண்டு சந்தேக நபர்களுமே இன்று விடுதியின் உணவகப் பகுதி மற்றும் மண்டபத்தில் குண்டுகளை வெடிக்க வைத்துள்ளனர் என்பது கண்காணிப்பு காணொளிப் பதிவில் இருந்து தெரிய வந்துள்ளது.
ஷங்ரி- லா விடுதி குண்டுவெடிப்புக்கு 25 கிலோ எடையுள்ள சி-4 வெடிபொருள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று விசாரணையாளர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
தற்கொலைக் குண்டுதாரிகள் என்று சந்தேகிக்கப்படுபவர்கள் தங்கியிருந்த அறையை உடைத்து காவல்துறையினர் சோதனையிட்டு அங்கிருந்து சில பொருட்களைக் கைப்பற்றியுள்ளனர்.
எனினும், தற்கொலைக் குண்டுதாரிகள் உள்நாட்டவர்களா வெளிநாட்டவர்களா என்பது உறுதி செய்யப்படவில்லை. மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.