குண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து மதத் தலைவர்களுக்கு இடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையும் இஸ்லாமிய மதத் தலைவர்களும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
கர்தினால் ஆண்டகையின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது. இந்த சந்திப்பில் முஸ்லிம் அரசியல்வாதிகள் பலரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், கபீர் ஹாசீம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.எம். மரிக்கார், முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்ட அரசியல்வாதிகள் சிலரும் இந்த சந்திப்பில் பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்து இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது
வணக்கஸ்தலங்களுக்கு விசேட பாதுகாப்பு! அமைச்சரவை கூட்டத்தில் முடிவு
வணக்கஸ்தலங்களுக்கு விசேட பாதுகாப்பை வழங்குவதற்கு இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், தேசிய பாதுகாப்பை பலப்படுத்துவது குறித்தும் இதன் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களையடுத்து, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் விசேட அமைச்சரவைக் கூட்டம் இன்று மாலை நடைபெற்றது.
இதன்போது நாட்டின் தற்போதைய நிலைவரம் குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது. குறிப்பாக முழுமையான விசாரணை அறிக்கையை விரைவில் கையளிக்குமாறு பாதுகாப்பு தரப்பினரிடம் கோருவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், வணக்கஸ்தலங்களுக்கு விசேட பாதுகாப்பை வழங்கவும், நாட்டில் இனியும் இப்படியான சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதை உறுதிப்படுத்துவது குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்குவது எப்படி, சட்டம், ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் சம்பந்தமாகவும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளன.