இலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட 24 பேரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு உட்பட 8 இடங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மேலதிக விசாரணைக்காக குற்ற விசாரணை திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பில் குண்டு தாக்குதல் மேற்கொள்வதற்காக தாக்குதல்தாரிகளை கொழும்பிற்கு அழைத்து வந்ததாக கூறப்படும் வான் வெள்ளவத்தை பிரதேசத்தில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன்போது அதன் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.
தாக்குதல்தாரிகள் சிலர் தற்காலிகமாக தங்கியிருந்ததாக சந்தேகிக்கப்படுகின்ற பாணந்துறை, கெஸெல்வத்தை, ஷேரிப் மாவத்தையில் அமைந்துள்ள வீடு தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில் குறித்த வீடுகளும் 3 மாதங்களுக்கு வாடகை அடிப்படை பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. மாதம் 40 ஆயிரம் ரூபாய் வாடகை அடிப்படையிலேயே குறித்த வீடு பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த வீட்டை சோதனையிட்ட போது வெடிபொருட்கள் தயாரிப்பதற்காக பயன்படுத்தப்படும் இரும்பு பந்துகள் மற்றும் பட்டரிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.
இந்த வீட்டில் பெண் மற்றும் சிறு பிள்ளை ஒன்று இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
கொழும்பு ஷங்கிரிலா ஹோட்டலில் இடம்பெற்ற வெடிகுண்டு தாக்குதலுக்கு தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படுபவர்கள் இந்த வீட்டில் இருந்தே வாடகை அடிப்படையில் பெற்றுக் கொண்ட வானில் சென்றுள்ளதாக கூறப்படுகின்றது. அவர்கள் நேற்று முன்தினம் அங்கிருந்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் எட்டு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதலில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 262 ஆக அதிகரித்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.