கோரத்தாக்குதலில் நேர்ந்த சோகம்!

இலங்கையில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்ததை தொடர்ந்து நாட்டு மக்கள் எந்தளவு வேதனை மற்றும் பயத்துடன் இருக்கிறார்கள் என தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் நேற்று நடந்த குண்டுவெடிப்பில் 290 பேர் உயிரிழந்தனர். 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அங்குள்ள மக்கள் சிலர் பேட்டியளித்துள்ளனர்.

சாந்த பிரசாத் என்பவர் தாக்குதலில் காயமடைந்த குழந்தைகளை மருத்துவமனையில் சேர்த்தார்.

அவர் கூறுகையில், நான் நேற்று காயமடைந்த இரண்டு சிறார்களை மருத்துவமனைக்கு தூக்கி சென்றேன். அதில் இரண்டு பெண் குழந்தைகளின் வயது ஆறு மற்றும் எட்டாகும். இதே வயதில் தான் எனக்கும் பெண் குழந்தைகள் உள்ளனர்.

காயமடைந்த குழந்தைகளின் உடைகள் முழுவதும் ரத்தமாக இருந்ததுடன் கிழிந்திருந்தது, இதுபோன்ற வன்முறையை மீண்டும் பார்ப்பது வேதனையாக உள்ளது என கூறியுள்ளார்.

சாலைகளை சுத்தப்படுத்தும் மாலதி விக்ரமா கூறுகையில்,

என் பணியை செய்யவே பயமாக உள்ளது. கருப்பு பிளாஸ்டிக் பையில் குப்பை இருந்தால் அதை தொடுவதற்கே பீதியாக உள்ளது. முன்னர் ஒரு சமயத்தில் பார்சல் வெடிகுண்டு இருக்குமோ என்ற பயத்தில் பேருந்து, ரயிலில் செல்ல அச்சப்படுவோம். அந்த ஞாபகம் தான் தற்போது வருகிறது என கூறினார்.

ஆட்டோ ஓட்டுனரான இம்தியாஸ் அலி கூறுகையில்,

என் மருமகனுக்கு 23 வயதாகிறது, அடுத்த வாரம் அவருக்கு திருமணம் நடக்கவிருந்தது. இந்நிலையில் தான் குண்டுவெடிப்பில் அவர் உயிரிழந்துவிட்டார். இதனால் திருமண வீடாக காட்சியளிக்க வேண்டிய இடம், தற்போது இறுதிச்சடங்கு நடக்கும் இடமாக காட்சியளிக்கிறது என கூறினார்.

சர்ச்சில் கருணரத்னே (52) என்பவர் கூறுகையில்,

தேவாலயத்தில் வெடிகுண்டு வெடித்த பின்னர் அங்கு யாருக்கேனும் உதவி செய்ய வேண்டும் என கருதி அங்கு சென்றேன். எங்கு பார்த்தாலும் சடலமாக இருந்தது, என் குழந்தைகள் சம்பவம் தொடர்பான செய்தியை தொலைக்காட்சியில் பார்த்த பின்னர் தேவாலயத்துக்கு செல்லவே பயப்படுகின்றனர்.

இதையடுத்து கடவுள் எங்கே? போன்ற பல கேள்விகளை என்னிடம் குழந்தைகள் கேட்கின்றனர் என கூறியுள்ளார்.