நாட்டில் இடம்பெற்ற கொலைகளுக்கு முஜிபுர் ரஹ்மானும் என்னை விமர்சித்த அமைச்சர்களும் பொறுப்புக்கூறவேண்டும் – விஜேதாச
நாட்டில் குண்டுத்தாக்குதலில் இடம்பெற்ற மனித கொலைகளுக்கு முஜிபுர் ரஹ்மானும் அன்று என்னை விமர்சித்த அமைச்சர்களும் பொறுப்புக்கூறவேண்டும் என விஜேதாச ராஜபக்ஷ் தெரிவித்தார்.
பாராளுமன்றம் இன்று விசேட அமர்வாக பிற்பகல் ஒரு மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது.
இதன்போது பிரதான நடவடிக்கைகள் இடம்பெற்ற பின்னர் நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பாக பிரதமர், பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன ஆகியோர் உரையாற்றியதன் பின்னர் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ உரையாற்றிக்கொண்டிருக்கும்போது, நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக விஜேதாச ராஜபக்ஷ அன்று அமைச்சராக இருக்கும்போது தெரிவித்திருந்தார் என தெரிவித்ததும் ஆளும்தரப்பு உறுப்பினர்கள் விஜேதாச ராஜபக்ஷவுக்கு எதிராக கூச்சலிட்டு பொறுத்தமற்ற வார்த்தைப் பிரயோகம் ஒன்றை மேற்கொண்டனர்.
இதன்போது ஒழுங்குப் பிரச்சினை ஒன்றை முன்வைத்து விஜேதாச ராஜபக்ஷ உரையாற்ற முற்பட்டபோது, பொறுத்தமற்ற வார்த்தையை நீக்குவதாக சபாநாயகர் அறிவித்தார். அதனைத்தொடர்ந்து விஜேதாச ராஜபக்ஷ தான் 2016 ஆம் ஆண்டு தெரிவித்த கருத்தை நினைவுபடுத்தி உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
தெளஹீத் ஜமாஅத் அமைப்பில் 4 குடும்பங்களைச் சேர்ந்த 32 பேர் ஐ.எஸ்.க்கு சென்று பயிற்சி பெற்று நாட்டில் பயங்கரவாத தாக்குதலுக்கு தயாராகி வருவதாக நான் கடந்த 2016 நவம்பர் மாதம் 16 ஆம் திகதி தெரிவித்திருந்தேன்.
அன்று அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் ஊடகவியலாளர் சந்திப்புக்களை நடத்தி, நான் தெரிவித்தது பொய்யென தெரிவித்தனர்.
ஆளும்தரப்பு உறுப்பினரான முஜிபுர் ரஹ்மான் போன்றவர்கள் அன்று என்னை சபித்தார்கள். அதனால் இந்த மனித கொலைகளுக்கு முஜிபுர் ரஹ்மானும் அந்த அமைச்சர்களும் பொறுப்புக்கூறவேண்டும்.
இடம்பெற்ற மனித படுகொலைகளின் பொறுப்பை இவர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றார்.