தினமும் குளிப்பது என்பது ஆரோக்கியமான வாழ்விற்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். குளிப்பது நமது உடலில் இருக்கும் அழுக்கு மற்றும் தூசுகளை வெளியேற்றுவதுடன் நம்மை புத்துணர்ச்சியாக உணர வைக்கிறது. நாகரீகமான, ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ விரும்பினால் தினமும் குளிக்க வேண்டியது அவசியமாகும்.
கோடைகாலம் வேற பிறந்து விட்டது, வேர்வையை விரட்டுவதற்காக தினமும் இரண்டு அல்லது மூன்று முறை குளிக்க அனைவரும் தொடங்கியிருப்பீர்கள். குளிப்பது ஆரோக்கியமான பழக்கம்தான் ஆனால் அதிகமுறை குளிப்பது மற்றும் அதிக நேரம் குளிப்பது என்பது உங்கள் ஆரோக்கியத்திற்கு எதிரான பழக்கமாகும். இந்த பதிவில் அதிக முறை குளிப்பதால் ஏற்படும் ஆரோக்கிய பாதிப்புகள் என்னென்ன என்று பார்க்கலாம்.
செயற்கை சுத்தப்படுத்தும் பொருட்கள்
குளிக்கும் போது சோப்பை உபயோகிக்கும் பழக்கம் அனைவர்க்கும் இருக்கிறது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையான சோப்பை பயன்படுத்துவார்கள். மேலும் சிலர் சுத்தப்படுத்தும் க்ரீம்களை கூட பயன்படுத்துவார்கள். நாம் அடிக்கடி உபயோகிக்கும் இந்த பொருட்களில் வேதியியல் பொருட்கள் எவ்வளவு இருக்கிறது என்பதை நாம் ஒருபோதும் கவனிப்பதில்லை. இந்த வேதிப்பொருட்களை அதிகம் உபயோகிக்கும் போது அது உங்கள் சருமத்தின் pH அளவை பாதிப்பதுடன் உங்கள் சருமத்தின் சமநிலையிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.
தேய்த்து குளிப்பது
தினமும் நமது சருமத்தை அழுத்தி தேய்த்து குளிக்கும்போது நாம் நமது சருமத்தை சேதப்படுத்த வாய்ப்புள்ளது. நமது சருமத்தின் வெளிப்புற அடுக்கில் இருக்கும் செபம் பகுதியை இது சேதப்படுத்தும். வெளிப்புற கதிர்வீச்சுகளில் இருந்து நம்மை பாதுகாக்க இந்த செபம் பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியம். இதில் ஏற்படும் பாதிப்பு சருமத்தில் சுருக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
சரும வறட்சி
அளவிற்கு அதிகமாக குளிப்பது உங்கள் சரும துளைகளில் பாதிப்பை ஏற்படுத்தி அதில் இருக்கும் இயற்கை எண்ணெயை வெளியேற்றுகிறது. இது சருமத்தில் இருக்கும் இரத்த நாளங்களை சிதைகிறது. இதனால் உங்கள் சருமம் வறட்சியடையும் ஆபத்து உள்ளது.
நச்சுப்பொருட்கள்
உங்கள் சருமம் அளவிற்கு அதிகமான குளியலால் வறட்சியடையும் போது அதனை சரிசெய்ய நீங்கள் செயற்கை ஈரப்பதமூட்டிககளை பயன்படுத்துவீர்கள். இந்த ஈர்ப்பதமூட்டிகள் உங்கள் சருமத்திலும், இரத்த நாளங்களில் நச்சுத்தன்மையை அதிகரிக்கும். இதனால் உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் பாதிக்கப்படும். மேலும் இது உங்கள் உடலில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்களை அழிக்கக்கூடும். அதிகமா குளிப்பதை தவிர்ப்பதே நல்லது.
ஆரோக்கியமற்றது
நமது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு நமது உடலில் சில நல்ல பாக்டீரியாக்கள் இருக்க வேண்டும். இந்த பாக்டீரியாக்கள்தான் நம்மை பல நோய்களில் இருந்து பாதுகாக்கிறது. குளிக்கும்போது நாம் பயன்படுத்தும் வேதிப்பொருட்கள் இதன் உற்பத்தியை பாதிப்பதால் நமது உடலுக்கான கவசம் அழிகிறது. மேலும் சோப்புகளில் இருக்கும் பேராபின் மற்றும் செனோஈஸ்ட்ரோஜன் என்னும் பொருட்கள் நமது சரும ஆரோக்கியத்தில் தலையிட்டு நமது உடலில் ஈஸ்ட்ரோஜனின் உற்பத்தியை அதிகரிக்கும்.
முடியின் நிறம்
நமது முடியின் நிறம் இயற்கையாவே கருப்பாகத்தான் இருக்கும். அதில் சேர்க்கப்படும் வேதிப்பொருட்களே அதன் நிறத்தை மாற்றுவதாக ஆய்வுகள் கூறுகிறது. அடிக்கடி குளிக்கும் போது நாம் பயன்படுத்தும் சோப்புகள் மற்றும் ஷாம்பூக்கள் நமது முடியின் இயற்கை நிறத்தை சிதைக்கக்கூடும்.