இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு ஐஎஸ் இயக்கம் பொறுப்பேற்று இருக்கிறது. ஆனால் 50 மணி நேரம் கழித்து மிக தாமதமாக இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் பொறுப்பேற்றது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
கிறிஸ்துவர்களின் பண்டிகையான ஈஸ்டர் அன்று இலங்கையில் கொடூரமான குண்டுவெடிப்பு தாக்குதல் நடைபெற்றது. இலங்கையில் அடுத்தடுத்து 3 தேவாலயங்கள், 4 ஹோட்டல்கள் உட்பட 8 இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்து உள்ளது.
இந்த குண்டுவெடிப்பில் 320க்கும் அதிகமானோர் பலியானார்கள். இதில் 450 பேர் காயம் அடைந்தனர். இதற்கு ஐஎஸ் இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.
பொதுவாக ஒரு தாக்குதல் நடந்தால் எந்த தீவிரவாத இயக்கமாக இருந்தாலும் குறைந்தபட்சம் 3 மணி நேரத்திற்குள் தாக்குதலுக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ளும். அமெரிக்காவில் நடந்த இரட்டை கோபுர தாக்குதல் தொடங்கி புல்வாமா தாக்குதல் வரை இப்படித்தான் நடந்து இருக்கிறது. சில தாக்குதல்கள் ஏற்கனவே கூறி, சவால் விடப்பட்டு கூட நடந்துள்ளது.
இந்த நிலையில்தான் இலங்கை தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்று இருக்கிறது. ஆனால் அவர்கள் இதை மிகவும் தாமதமாக செய்து இருக்கிறார்கள். 50 மணி நேரம் கழித்துதான் ஐஎஸ் அமைப்பு இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்று உள்ளது. இது பல கேள்விகளை எழுப்பி உள்ளது.
இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் ஈராக் அண்ட் லெவனண்ட் (ஐஎஸ்ஐஎல் – ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் இன்னொரு பெயர்) இயக்கத்தின் அமாக் இணைய பக்கத்தில் இந்த தகவல் வெளியாகி உள்ளது. எப்போதும் இந்த பக்கம் வழியாகவே ஐஎஸ் அமைப்பு தீவிரவாத தாக்குதல்களுக்கு பொறுப்பேற்கும் என்பது குறிப்பிடத்தக்கது. எங்கள் அமைப்பை சேர்ந்த குழுதான் இலங்கை தாக்குதலை நடத்தி உள்ளது என்று அந்த இணைய பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐஎஸ் இயக்கம் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்க ஏன் இவ்வளவு நேரம் எடுத்தது, பொதுவாக உடனடியாக பொறுப்பேற்கும் ஐஎஸ் இயக்கம் ஏன் இதில் மட்டும் காலதாமதம் செய்தது என்று கேள்வி எழுந்து உள்ளது. இதற்கு நிறைய காரணங்களையும் தெரிவிக்கிறார்கள்.
ஐஎஸ் இயக்கம் இலங்கையில் இன்னும் சில தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்ததாகவும், அது நடக்கும் வரை காத்திருந்ததாகவும், அது முறியடிக்கப்பட்ட காரணத்தால் இப்போது தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளதாக கூறுகிறார்கள். அதே சமயம் இதற்கு பின் நிறைய அரசியல் இருக்கிறது. ஐஎஸ் இவ்வளவு தாமதமாக பொறுப்பேற்றதற்கு பின் வேறு எதோ மர்மம் இருக்கிறது என்றும் கூறுகிறார்கள்.