தமிழ் சினிமாவில் காமெடியனாகவும், சின்னத்திரையில் காமெடி ஷோ நிகழ்ச்சியிலும் பங்கேற்று வருபவர், நடிகர் தாடி பாலாஜி. இவருக்கும் இவரது மனைவி நித்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்கின்றனர்.
இவர்களுக்கு போஷிகா என்ற மகள் உள்ளார். இருவரும் ஒருவர் மீது ஒருவர் புகார் செய்துள்ளதால் போலீஸ் விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், மகளை பார்க்க அனுமதிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் பாலாஜி வழக்கு தொடுத்திருந்தார். விசாரணையில், வாரம் ஒரு முறை பாலாஜி அவரது மகளை பார்க்க அனுமதிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து பாலாஜி கூறுகையில், என் மகளின் படிப்பு செலவை நானே பார்த்துக் கொள்கிறேன். என் பலமே என் மகள் தான். அவரை வைத்து என்னை வீழ்த்த நித்யா நினைக்கிறார். நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் எனக்கு நியாயம் கிடைத்துள்ளது. வாரம் ஒரு முறை என் தாய் வீட்டில் மாலை 3:00 முதல் 4:00 மணி வரை என் மகளை பார்க்க நீதிமன்றம் அனுமதித்துள்ளது. இதற்கு துணை நின்ற அனைவருக்கும் நன்றி. இவ்வாறு அவர் கூறினார்.