தூத்துக்குடி விஜய் ரசிகர் மன்ற தலைவராக உள்ளவர் பில்லாஜெகன். தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளராகவும் உள்ள இவர் தனது சகோதரர்களுடன் சேர்ந்து லாரி தொழில் மற்றும் சிட்ஃபண்ட் நடத்தி வந்துள்ளார்.
சொத்து பிரிப்பது தொடர்பாக, கடந்த 10 நாட்களாக சகோதரர்களுக்குள் தகராறு நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்றிரவு ஏற்பட்ட தகராறில் பில்லாஜெகன் அவரது கடைசி தம்பியான சிமன்சனை துப்பாக்கியால் சுட்டதாக தெரிகிறது.
உயிருக்கு போராடிய சிமன்சன் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட, அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தகவல் அறிந்து சென்ற வடபாகம் காவல்நிலையத்தினர், சிமன்சனின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தலைமறைவாக உள்ள பில்லா ஜெகன் தேடப்பட்டு வருகிறார். பில்லா ஜெகன் மீது ஏற்கெனவே தனது மகளை காதலித்தவரை கொடூரமாக கொலை செய்த வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.