கேரளா மாநிலம் கண்ணூர் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடியில் உள்ள விவிபேட் இயந்திரத்தில் பாம்பு இருந்ததையடுத்து,வாக்காளர்கள் பீதியடைந்தனர்.
கேரளா மாநிலத்தில் இன்று ஒரே கட்டமாக 20 தொகுதிகளுக்கும் மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து காலை 7 மணி முதலே வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
பொதுமக்கள் ஆர்வத்துடன் நீண்ட நேரம் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். இதேப்போல் கேரளா முதல்வர் பினராயி விஜயன், கண்ணூரில் முதல் ஆளாக சென்று வாக்களித்தார்.
இந்நிலையில் கண்ணூர் தொகுதிக்கு உட்பட்ட மயில் கண்டகை நகரில் உள்ள வாக்குச்சாவடியில் மக்கள் நீண்ட வரிசையில் வாக்களிக்க காத்திருந்தனர். வாக்களிக்க சென்ற ஒருவர் விவிபேட் இயந்திரத்தில் இருந்து சத்தமும், இயந்திரம் ஆடுவதுமாக இருந்ததை கவனித்தார். அப்போது, சற்றும் எதிர்பாராத விதமாக பாம்பு ஒன்று வெளியே வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அந்த வாக்காளர் பாம்பு என சத்தம் போடவே, வாக்களிக்க வரிசையில் இருந்த மக்களும், தேர்தல் அறையில் இருந்த அதிகாரிகளும் அலறியடித்து வெளியே ஓடினர். உடனடியாக போலீசார் விவிபேடில் இருந்த பாம்பை வெளியே எடுத்தனர். அதன்பின்னர் அந்த பாம்பு காட்டுப்பகுதியில் விடப்பட்டது.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் சிறிதுநேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டு, மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கி நடந்து வருகிறது.