இலங்கை குண்டுவெடிப்பில் அதிர்ஷ்டவசமாக சென்னை புதுமண தம்பதி உயிர் தப்பியுள்ளனர்.
இலங்கையில் ஈஸ்டர் திருநாளான ஞாயிற்றுக்கிழமை அன்று ஏராளமானோர் பிரார்த்தனை செய்ய அங்கு கூடினர். அது போல் ஈஸ்டர் கொண்டாட்டத்துக்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் ஹோட்டல்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்திருந்தனர்.
இந்த நிலையில் 3 தேவாலயங்களிலும் 4 ஹோட்டல்களிலும் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில் 290 பேர் கொல்லப்பட்டனர். 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த நிலையில் சென்னை எழும்பூரைச் சேர்ந்த இனியன், கீதாஞ்சலி என்ற புதுமண தம்பதி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். இவர்களுக்கு கடந்த நவம்பர் மாதம் திருமணமானது.
இவர்கள் இருவரும் தேனிலவுக்காக இலங்கைக்கு கடந்த 19-ஆம் திகதி கொழும்பு சென்றனர். இருவரும் குண்டுவெடிப்பு நிகழ்ந்த ஹோட்டல்களில் ஒன்றான கிங்ஸ்பரி ஸ்டார் ஹோட்டலுக்கு அருகில் உள்ள மற்றொரு ஹோட்டலில் தங்கியிருந்தனர்.
மகிழ்ச்சியாக வாழ்க்கை பயணத்தை தொடங்க சென்ற தம்பதிக்கு வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்வாக இந்த குண்டுவெடிப்பு அமைந்துவிட்டது.
அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியிருந்தாலும் பல உயிர்கள் பறிபோக காரணமாக இருந்த குண்டுவெடிப்பு சம்பவத்திலிருந்து வெளி வர இவர்களுக்கு பல நாட்கள் ஆகும்.