தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பில் புலனாய்வு தகவல்கள் கிடைப்பதில் சிக்கல் நிலவியதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அவர் வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தகவல்களை பரிமாறிக் கொள்வதில் நிலவிய சிக்கல் தொடர்பில் அதிகாரிகள் தங்களது கவனத்தை செலுத்தியுள்ளனர். தற்போது தீவிரவாதிகளை கைது செய்யவும், தீவிரவாத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதுவரை இலங்கையர்களுடன் தொடர்புடைய அமைப்பு ஒன்று சர்வதேச அமைப்பு ஒன்றுடன் தொடர்பினை வைத்துள்ளது.
இந்த தொடர்புகளை கண்டறிவதற்காக சில வெளிநாட்டு நிறுவனங்களின் உதவியையும் நாங்கள் நாடியுள்ளோம்.
இந்தியா எங்களுக்கு சில உளவுத்துறை தகவல்களை அளித்தது. ஆனால் நாங்கள்தான் சற்று கவனம் இல்லாமல் இருந்து விட்டோம்.
சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளின் உளவுத்துறையுடன் நாங்கள் தொடர்பில் உள்ளோம். அமெரிக்கா மற்றும் இங்கிலாந்திடம் இருந்தும் எங்களுக்கு உதவிகள் கிடைக்கின்றன
வெளிநாட்டு சதி ஏதேனும் உள்ளதா என்பது குறித்து வெளிநாட்டு நிறுவனங்களிடம் நாங்கள் உதவி கேட்டுள்ளோம்.
கடந்த மாதம் நியூசிலாந்தில் மசூதி மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதற்கு பதிலடியாக இலங்கையில் டீவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகித்தாலும், மசூதி தாக்குதலின் முன்னரே இந்த தாக்குதல் திட்டங்கள் தீட்டப்பட தொடங்கியுள்ளன.
தொடர் குண்டுவெடிப்பால் சுற்றுலாத்துறை பாதிக்கப்பட்டிருந்தாலும், இதில் இருந்து இலங்கை மீண்டு வரும். இதேபோன்று எகிப்து, பாலியிலும் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்திருக்கின்றன.
அந்த நாடுகள் வெகு விரைவில் பழைய நிலைக்கு திரும்பின. இருந்தாலும் எங்கள் நாட்டின் பொருளாதாரத்திற்கு சிக்கலான விஷயம்தான் இங்கு நடந்திருக்கிறது.
இதுபோன்ற பல தீவிரவாத தாக்குதல்களையும், போர்களையும் நாங்கள் பார்த்து விட்டோம்.
புலிகள் அமைப்பினரால் நடாத்தப்பட்ட யுத்தம் போன்ற இது இல்லை, இது விடுதலைப் புலிகளிலிடம் இருந்து வேறுபட்டது.
இது முஸ்லிம்களின் பெரும்பான்மை ஆதரவைப் பெறாத ஒரு குழுவினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல்கள் சம்பவங்களால் இலங்கையர்களின் ஒற்றுமை பாதிக்காது எனவும், சில பகுதிகளில் பதற்றம் நிலவுகிறது, ஆனால் இது போன்ற சூழ்நிலையில் இது இயற்கையானது. நாங்கள் அதை சமாளிக்க வேண்டும்“ எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.