திருமணத்திற்கு முன் சூர்யா-ஜோதிகா இணைந்து நடித்த ‘காக்க காக்க’, ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’, ‘சில்லுன்னு ஒரு காதல்’, ‘பேரழகன்’, ‘மாயாவி’, ‘உயிரிலே கலந்தது’ போன்ற படங்கள் நல்ல வெற்றியை பெற்றது.
ஆனால் திருமணத்திற்கு பின் ரீஎண்ட்ரி ஆன ஜோதிகா, இன்னும் சூர்யாவுடன் இணைந்து நடிக்கவில்லை. இருப்பினும் அவர் சூர்யாவின் தயாரிப்பில் நடித்து வருகிறார்.
அந்த வகையில் சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குனர் கல்யாண் இயக்கத்தில் ஜோதிகா முக்கிய வேடத்தில் நடித்து வந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பு வெறும் 35 நாட்களில் முடிவுக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த படத்திற்கு ‘ஜாக்பாட்’ என்ற டைட்டில் வைத்திருப்பதாகவும் இதுகுறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்றும் படக்குழுவினர்களிடம் இருந்து கசிந்த செய்தி ஒன்று தெரிவிக்கின்றது.
ஜோதிகாவுடன் முக்கிய வேடத்தில் ரேவதி நடிக்கும் இந்த படத்தில் மன்சூர் அலிகான், ஆனந்த்ராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். அனந்தகுமார் ஒளிப்பதிவில் விஷால் சந்திரசேகர் இசையில் உருவாகியுள்ள இந்த படம் வரும் ஜூலையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.