கணவரை கொன்ற மனைவி, அனைத்து தடயங்களையும் வெறும் 90 நிமிடங்களில் அழித்துள்ள தகவல் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநில முன்னாள் முதல்வராக இருந்தவர் என்.டி திவாரி. இவரின் மகன் ரோஹித் திவாரி மனைவியுடன் டெல்லியில் வசித்துவந்துள்ளார். ஏப்ரல் 11-ம் திகதி நடந்த தேர்தலுக்கு வாக்களிக்க உத்தரகாண்ட் சென்றுவிட்டு 15-ம் திகதி மீண்டும் டெல்லி திரும்பியுள்ளார். அவர் வீட்டுக்கு வந்தபோது மது போதையில் இருந்துள்ளார்.
பின்னர் மறுநாள் ஏப்ரல் 16-ம் தேதி, ரோஹித்தின் அம்மா உஜ்வாலாவுக்கு ஒரு போன்கால் வந்துள்ளது. அதில் ரோஹித், மூக்கில் ரத்தம் வடிந்தபடி மயங்கிய நிலையில் உள்ளதாக சொல்லப்பட்டதால் அவரை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். அங்கு ரோஹித்தை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கெனவே அவர் இறந்துவிட்டார் என தெரிவித்துள்ளனர்.
ஆனால் அவர் மாரடைப்புக் காரணமாக உயிரிழந்தார் என சொல்லப்பட்டதால் சந்தேகம் அதிகமானதால் ரோஹித்தின் உடல் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு உடற்கூறாய்வு சோதனைக்காக அனுப்பப்பட்டது.
உடற்கூறாய்வு ரிப்போர்ட்டில் பல பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. ரோஹித் திவாரியின் கழுத்து நெறிக்கப்பட்டிருப்பதாகவும், மூச்சுத் திணறி உயிரிழந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
விசாரனையில் காத்திருந்த அதிர்ச்சி
இதனைத் தொடர்ந்து விசாரணையில் இறங்கிய போலீசார், ரோஹித் வீட்டில் இருந்த 7 சிசிடிவி கேமராக்களையும் கைப்பற்றி சோதனை செய்தனர். அதேபோல அவருடைய மனைவி அபூர்வா, அவரது வீட்டில் வேலை செய்த பெண் மற்றும் உறவினர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
அப்போது, வீட்டு வேலைக்காரப்பெண் பல தகவல்களை கூறியிருக்கிறார். அதில், ரோஹித்துக்கும் அவரின் மனைவிக்கும் இடையே கடந்த சில மாதங்களாக பிரச்னை இருந்துள்ளது. இருவரும் ஒரே வீட்டில் இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வந்துள்ளனர். சம்பவம் நடந்த அன்று அபூர்வாவிடமிருந்து ரோஹித்துக்கு வீடியோ கால் வந்ததாகவும், ரோஹித்தும் அவரின் மனைவியும் நீண்ட நேரம் சண்டை போட்டுக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இதன் பின்னர் அவரது மனைவி அபூர்வாவிடம் சுமார் 10 மணி நேரம் தொடர்ந்து துருவித் துருவி விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அவர் கூறிய பதில்கள் அனைத்தும் முன்னுக்குப் பின் முரணாக இருந்துள்ளன. இதனையடுத்து ரோஹித் வீட்டில் நடத்தப்பட்ட தடயவியல் சோதனையில் அபூர்வாதான் கொலை செய்தார் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
போலீசாரின் கிடுக்குப்பிடியால் அவரும் ஒப்புக்கொண்டுள்ளார். ரோஹித்துடன் தனக்கு நடந்த திருமணத்தில் மகிழ்ச்சியில்லாத காரணத்தினால்தான் கணவரைக் கொன்றதாக அவர் கூறியிருக்கிறார்.
இதுகுறித்து அவர், ஏப்ரல் 16-ம் தேதி ரோஹித்தின் அறைக்குள் சென்ற அபூர்வா தலையணை வைத்து அழுத்திக் கொலை செய்துள்ளார். பின்னர் கொலை செய்த அனைத்து தடயங்களையும் வெறும் 90 நிமிடங்களில் அழித்துள்ளார். மேலும், அபூர்வாவின் முன்னாள் காதலன் இந்த கொலையில் தொடர்பு இருப்பதாக தெரிவதால் போலீசார் அவரது காதலனையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர்.