ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னால் பொதிந்துள்ள உண்மைகள்

ஏப்ரல் 21, காலை 8.30 மணியளவில் இலங்கையின் சில தேவாலயங்களையும், பிரபல ஹோட்டல்களையும் இலக்கு வைத்து நடாத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதல் மிகவும் கண்டிக்கத்தக்கதும் வருந்தத் தக்கதுமாகும். தாக்குதலை மேற்கொண்டவர்களும், அதன் சூத்திர தாரிகளும் சந்தேகத்திற்கிடமின்றி பயங்கரவாதிகளே. இறை நிந்தனைக்குரியவர்களே.

இத்தாக்குதலுக்கு இலக்காகியவர்கள் அப்பாவிப் பொதுமக்களாவர். அவர்களுக்காகப் பிரார்த்திக்க வேண்டும். ஆருதல் கூற வேண்டும். அவர்களைத் தேற்றுவதில்; நியுசிலாந்துப் பிரதமரை முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும். சம்பந்தப்பட்ட பயங்கரவாதிகள் கண்டுபிடிக்கப்பட்டு சட்டத்தின் முன்னால் நிறுத்தப்பட வேண்டும். இனமோ மதமோ பாராமல் தண்டிக்கப்பட வேண்டும். இவ்விடயத்தில் அரசாங்கத்திற்கும் புலனாய்வுத் துறைக்கும் உதவுவது நாட்டுப் பிரஜைகள் அனைவரதும் கடமையாகும்.

இதுபோன்ற தாக்குதல்கள் நடைபெற்றால் அதுபற்றிய பல்வேறு ஊகங்களும் வதந்திகளும் பரவுவது சகஜம். அவை தொடர்பில் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதே நேரம் பொதுமக்களை இலக்கு வைத்த இவ்வாறான பயங்கரவாதத் தாக்குதல்கள் ஏன் இடம்பெறுகின்றன, அவற்றுக்குப் பின்னால் இருக்கும் குரூர சூத்திரதாரிகள் யார், இத்தாக்குதல்கள் மூலம் அவர்கள் எதை அடைந்து கொள்ள முயற்சிக்கின்றனர்; என்பது பற்றி அனைவரும் அறிந்திருக்க வேண்டும். நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாப்பதற்கு இது மிகவும் முக்கியமானதாகும்.

ஒரு நாட்டில் இடம் பெறும் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு அந்நாட்டினது சமகால சமய, சமூக, அரசியல் சூழ்நிலைகளுடன் தொடர்பிருப்பது போலவே பூகோளமயமாக்கல் காரணமாக சர்வதேச நோக்கங்களுடனும் அத்தாக்குதல்களுக்கு தொடர்பிருக்கலாம் என ஊகிப்பது நியாயமான ஒன்றாக மாறியுள்ளது. இவ்வகையில் இலங்கையில் இடம் பெற்ற ஏப்ரல் 21 ஆம் திகதித் தாக்குதலின் தேசிய சர்வதேச பின்னணிகள் குறித்து நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இத்தாக்குதல் காரணமாக அப்பாவிப் பொது மக்கள் பலியான போதிலும் அதன் சூத்திர தாரிகளால் தூர நோக்கில் இஸ்லாமும் முஸ்லிம்களும் இலக்கு வைக்கப்பட்டனரா? என்பதும் ஒரு கேள்விக் குறியாகும். காரணம் இன்று இஸ்லாம் குறித்தும் முஸ்லிம்கள் குறித்தும் பிழையான அபிப்பிராயங்களையும் வெறுப்புணர்வுகளையும் ஏற்படுத்துவதற்கு முக்கியமான சில சர்வதேச சக்திகள் முயற்சித்து வருகின்றன.தாக்குதல் குறித்து சரியான முடிவுக்கு வர பின்வரும் நான்கு பரிமாணங்களில் நுணுக்கமாக ஆராயப்பட வேண்டும்.

1. தாக்குதல் நடாத்தியவர்கள் 2. உள்நாட்டு அரசியல் நிலை3. வெளிநாட்டு வலைப்பின்னல்4. முஸ்லிம் சமூகம்

தாக்குதல் நடத்தியவர்கள்:

தாக்குதல் நடாத்தியவர்கள் உள்நாட்டைச் சேர்ந்த ISIS என்ற தீவிரவாதக் குழுவைச் சார்ந்த முஸ்லிம் இளைஞர்கள் என ஊடகங்களில் பரவலாகப் பேசப்படுகிறது. இதன் தலைவர் ஆரம்பத்தில் இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் பல்வேறு குழப்பங்களையும் பிளவுகளையும் ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டதுடன், ஜனநாயகம் சகவாழ்வு பற்றி பேசும் ஜமாதே இஸ்லாமி போன்ற அமைப்புக்களையும் ஜாமியா நளீமியா போன்ற கலா நிலையங்களையும் கடுமையாக விமர்சிப்பவராகவும் அவைபற்றி நச்சுக் கருத்துக்களைப் பரப்புபவராகவும் இருந்தார்.

இவர் நாட்டில் இடம்பெற்ற இரு கலவரங்களையும் பௌத்த தீவிரவாதிகளின் அச்சுறுத்தல்களையும் சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி ஜிஹாத் முழக்கம் செய்தார். ஆதரவாளர்களைத் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டார். தீவிர சிந்தனைப் போக்குடைய சில இளைஞர்கள் இவரது அமைப்புடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டனர்.

ஸஹ்ரான் ஹாஷிம் சார்ந்தவர்கள் சர்வதேச ISIS பயங்கரவாதிகளின் செயல்களை நியாயம் காண்பவர்களாகவும் அதற்கு ஆதரவளிப்பவர்களாகவுமே இருந்து வந்தனர். இவர்கள் பற்றிய முழுமையான உளவுத்தகவல்களும் தேசிய சர்வதேச உளவுத்துறையினரிடம் காணப்படுகிறன. அதற்கு மத்தியில் இவர்கள் மாவனல்லைப் பகுதியல் நடந்த சிலை உடைப்பு விடயத்திலும் சம்பந்தப்பட்டமை விசாரணைகள் மூலம் தெரிய வந்தது. சிலர் கைது செய்யப்பட்டார்கள். பிரதானமானவர்கள் மர்மமாக மறைந்தனர். இது இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்திக் கொண்டே இருந்தது.

தொடர்ந்து வெளியிடப்பட்ட புலனாய்வு, புலன்விசாரணை அறிக்கைகளில் ஓரிரு இடங்களில் முஸ்லிம் தீவிரவாத அமைப்பைச் சார்ந்த சிலர் வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்ட செய்திகள் வெளிவந்தன. தொடர்ந்து புலனாய்வுப் பிரிவின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது, முஸ்லிம் சமூகத்தின் அனைத்துத் தரப்பினரதும் வெறுப்பைப் பெற்ற, புலனாய்வுப் பிரிவின் கடும் கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்ட இந்த அமைப்பினால் நன்கு திட்டமிடப்பட்ட ஏப்ரல் 21 தாக்குதலை எவ்வாறு செய்ய முடிந்தது என்பது அதிர்ச்சியான ஒன்றாகும். இது பல்வேறு சந்தேகங்களைத் தோற்றுவிக்கின்றது.

ஐ.எஸ்.எஐ.எஸ். அமைப்பை ஆதரிக்கும் இளைஞர்கள் பெரும்பாலும் வசதியான மேலும் நல்ல குடும்பத்தைச் சார்ந்தவர்கள். படித்தவர்கள். ஆங்கில மொழியோடு பரீட்சயமானவர்கள். என்றாலும் இவர்கள் அனைவரும் கண்டுபிடிக்கப்பட்டு பாரபட்சமின்றி விசாரிக்கப்பட வேண்டும். தண்டிக்கப்பட வேண்டும். அதேநேரம் இவர்கள் தீவிர வாத சிந்தனைகளினால் கவரப்படுவதற்கு சில உளவியல் காரணங்கள் இருக்கின்றன. அதைக் கண்டறிந்து சமூகத்திறகு வழிகாட்டல் வழங்குவது பொறுப்பானவர்களின் கடமையாகும்.