யார் இந்த சஹ்ரான் ? வாழ்கை தடம் மாறியது எவ்வாறு ?

அச்சத்துள் உறைந்து போயிருக்கிறது காத்தான்குடி. தமக்குப் பரிட்சயமில்லாத எவருடனும் பேசுவதற்கு அங்குள்ள மக்கள் தயங்குகின்றனர்.

வழமையான சந்தோசத்தையும் கலையினையும் இந்த ஊர் இழந்து போயுள்ளதைக் காண முடிகிறது. இலங்கையில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ள சஹ்ரான் காசிம் என்பவர் பிறந்து வளர்ந்த ஊர்தான் காத்தான்குடி.

இலங்கையின் கிழக்கு மாகாகணம் – மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ளது காத்தான்குடி. இந்த ஊர் மக்களின் பிரதான தொழில் வியாபாரமாகும். ஆனால், கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களுக்குப் பின்னர், இங்குள்ள ஏராளமான கடைகள் இன்றுவரை திறக்கப்படவில்லை.

சஹ்ரான் பற்றிய தகவல்களை திரட்டிக் கொள்ளும் பொருட்டு, அந்த ஊரைச் சேர்ந்த பலரை அனுகியபோதும், பலன் எவையும் கிடைக்கவில்லை. ஆனால், எதிர்பாராத விதமாகச் சந்திக்கக் கிடைத்த மௌலவி எம்.யூ.எம். தௌபீக் என்பவர், பிபிசி தமிழுடன் பேச முன்வந்தார்.

தௌபீக் காத்தான்குடியைச் சேர்ந்தவர். சஹ்ரான் உருவாக்கிய தேசிய தௌஹீத் ஜமா-அத் அமைப்பின் தலைவர் பொறுப்பை தற்போது வகித்து வருவதோடு, சஹ்ரான் தலைமையில் நிர்மாணிக்கப்பட்ட பள்ளிவாசலையும் பொறுப்பேற்று நடத்தி வருகின்றார்.

இனி, பிபிசி தமிழுடன் மௌலவி தௌபீக் பேசியதை அப்படியே வழங்குகின்றோம்.

“தேசிய தௌஹீத் ஜமா-அத் என்கிற அமைப்பினை 2012ஆம் ஆண்டு சஹ்ரான் மௌலவி உருவாக்கினார். ஆனாலும் 2015ஆம் ஆண்டுதான் அதனை பதிவு செய்தோம். ‘சமூக சேவை’ அமைப்பாகவே தேசிய தௌஹீத் ஜமா-அத் பதிவு செய்யப்பட்டது. ஆரம்பத்தில் காத்தான்குடி ‘பலாஹ்’ மதரஸாவில்தான் 2001ஆம் ஆண்டு சஹ்ரான் ஓதினார். நானும் அங்குதான் ஓதினேன். அவர் எனக்கு ஒரு வருடம் சீனியர். சஹ்ரான் நல்ல வாசகர், தேடல் உள்ளவர்.

‘பலாஹ்’ மதரஸா நிர்வாகத்தினர் தப்லீக் கொள்கையைக் கொண்டவர்கள். ஆனால், அந்த மதரஸாவில் ஓதிக் கொண்டிருக்கும் காலத்திலேயே, தௌஹீத் அமைப்பினருடன் சஹ்ரான் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார். தௌஹீத்வாதிகளுக்கும் தப்லீக்வாதிகளுக்கும் எப்போதும் முரண்பாடு உள்ளதல்லவா? அதனால், ‘பலாஹ்’ மதரஸாவில் இருந்து சஹ்ரான் விலக்கப்பட்டார்.

ஏற்கனவே, ‘பலாஹ்’ மதரஸாவில் இருந்தபோதே சஹ்ரான் அல்-ஹாபிஸ் (அல் குர்-ஆனை முழுமையாக மனனம் செய்தவர்) பட்டத்தைப் பெற்றிருந்தார். ஆனால், மௌலவி பட்டப்படிப்பை ‘பலாஹ்’ மதரஸாவில் தொடர்ந்து கொண்டிருந்தபோதுதான், அவர் அங்கிருந்து விலக்கப்பட்டார். இது நடந்தது 2005இல் என்று நினைக்கிறேன். இதனையடுத்து காத்தான்குடியிலுள்ள ‘தௌஹீத் இஸ்லாமிக் சென்டர்’ எனும் அமைப்பில் சஹ்ரான் இணைந்து, சிறிது காலம் செயற்பட்டு வந்தார்.

திருமணத்தின்போது பெண்களிடமிருந்து ஆண்கள் சீதனம் பெற்றுக் கொள்ளக் கூடாது என்கிற கொள்கையினை உடைவர் சஹ்ரான். ஆனால், ‘தௌஹீத் இஸ்லாமிக் சென்டர்’ அமைப்பிலிருந்தவர்கள் சஹ்ரானின் அந்தக் கொள்கையினை ஏற்கவில்லை. அதனால், அவர்களுடன் முரண்பட்டுக் கொண்டு, ‘தௌஹீத் இஸ்லாமிக் சென்டர்’ எனும் அமைப்பிலிருந்து சஹ்ரான் வெளியேறினார்.

இவ்வாறு விலகிய சஹ்ரானும் இன்னும் சிலரும் இணைந்து, காத்தான்குடியில் ‘தாருல் அதர் அத்தஅவியா’ எனும் அமைப்பு ஒன்றினை உருவாக்கினார்கள். இந்தக் காலகட்டத்தில் மௌலவி பட்டத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும் எனும் விருப்பத்துடன், குருணாகலில் உள்ள ‘இப்னு மாசூத்’ எனும் மதரஸாவில் சேர்ந்து கொண்ட சஹ்ரான், தன்னுடைய திறமை காரணமாக, குறுகிய காலத்திலேயே அங்கு அந்தப் பட்டத்தைப் பெற்றுக் கொண்டார்,” என்று கூறி நிறுத்தினார் மொலவி தௌபீக்.

சஹ்ரான் உருவாக்கிய பள்ளிவாசலில்தான் மௌலவி தௌபீக் உடன் நாம் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது, அங்கு அடிக்கடி போலீஸாரும் பாதுகாப்புப் படையினரும் வந்து சென்று கொண்டிருந்தனர். உள்நாட்டு வெளிநாட்டு ஊடகவியலாளர்களும் வந்தார்கள். இடையில் நின்றுபோன பேச்சைத் தொடர்ந்தோம்.

“அதற்குப் பிறகு என்னானது”?

விட்ட இடத்திலிருந்து தௌபீக் ஆரம்பித்தார்; “மௌலவி பட்டத்தைப் பெற்றுக் கொண்ட சஹ்ரான், மீண்டும் ‘தாருல் அதர்’ இல், ஒரு பிரசாரகராக இணைந்து கொண்டார். காலம் ஓடியது. ஒரு கட்டத்தில் ‘தாருல் அதர்’ அமைப்பிலிருந்த மௌலவிமார்கள் சஹ்ரான் மீது, ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தனர். அதாவது, ஹதீஸ்களை தவறாகவும், மாற்றியும் சஹ்ரான் கூறுகிறார் என்பதே அந்தக் குற்றச்சாட்டாகும். இந்தக் காலகட்டத்தில் ஜப்பானுக்கு சஹ்ரான் சென்றிருந்ததாகவும், சில மாதங்கள் அங்கு அவர் தங்கியிருந்து சமயப் பணிகளில் ஈடுபட்டிருந்தாகவும் பிபிசியிடம் மௌலவி தௌபீக் கூறினார்.

“ஜப்பானிலிருந்து நாட்டுக்குத் திரும்பிய சஹ்ரான் ‘தாருல் அதர்’ அமைப்பில் மீண்டும் இணைந்து இயங்கினார். ஆனாலும், அது நீடிக்கவில்லை திரும்பவும் சஹ்ரானுக்கும் அந்த அமைப்பிலிருந்த மௌலவிமாருக்கும் இடையில் முரண்பாடுகள் தோன்றின. ‘தாருல் அதர்’ இல் இருந்து சஹ்ரானை விலக்க வேண்டும் என்று, அந்த அமைப்பின் நிர்வாகத்தினர் முடிவு செய்தார்கள். இதனையடுத்து, சஹ்ரானே விலகிக் கொண்டார்,” என்று மௌலவி தௌபீக் கூறினார்.

இதற்குப் பின்னர் 2010ஆம் ஆண்டு காலப்பகுதியில் சஹ்ரான் திருமணம் செய்து கொண்டதாக மௌலவி தௌபீக் கூறினார். தொழில்கள் செய்வதிலும் அவர் ஆர்வமாக இருந்தார்”.

ஆனாலும், அவருடைய பிரசார நடவடிக்கைகள் நின்றுபோகவில்லை. வீட்டில் இருந்து கொண்டு பிரசார நிகழ்வுகளை சஹ்ரான் ஒழுங்கு செய்து நடத்தி வந்ததாக, தௌபீக் கூறுகின்றார். குருணாகல் பிரதேசத்திலுள்ள கெகுணுகொல்ல எனும் ஊரில்தான் சஹ்ரான் திருமணம் செய்து கொண்டார். “தேசிய தௌஹீத் ஜமா-அத் அமைப்பை 2012இல், சஹ்ரான் உருவாக்கினார். ஆரம்பத்தில் இந்த அமைப்புக்காக ஒரு காணி வாங்கப்பட்டு, அதில் ஒரு குடிசையாக பள்ளிவாசலொன்று அமைக்கப்பட்டது”.

ஆனால், இப்போது அந்தக் குடிசையானது, மாடிக் கட்டடத்தைக் கொண்ட பள்ளிவாசலாக மாறியிருக்கிறது. “இதற்கான நிதி எங்கிருந்து கிடைத்தது,” என்ற கேள்விக்கு “மக்களிடமிருந்தே பணம் வசூலிக்கப்பட்டது. காணியை வாங்குவதற்கும், பள்ளிவாசல் கட்டுவதற்கும், மக்கள் நிதி வழங்கினார்கள்” என்றார் மௌலவி தௌபீக். தற்கொலைக் குண்டுத்தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் சஹ்ரான், மிகவும் அறியப்பட்ட ஒரு சமூக சேவையாளராகவும் இருந்துள்ளார்.

அது குறித்து தௌபீக் இப்படிக் கூறுகிறார்;

2017ஆம் ஆண்டு வரையில் சஹ்ராரின் செயற்பாடுகள் சிறப்பாகவே இருந்தன. சீதனத்துக்கு எதிரான மாநாடுகளை ஊரிலும், வெளி ஊர்களிலும் நடத்தி வந்தார். அவரது பிரசாரம் அப்போதெல்லாம் இலங்கை அரசுக்கு எதிரானதாக இருந்ததில்லை. போதை ஒழிப்புக்கு எதிரான பிரசார நடவடிக்கைகளில் அவர் மும்முரமாக இருந்தார். சமூக சேவையில் அவர் இன – மத பேதங்கள் பாராமல் செயல்பட்டார். உதாரணமாக, ரக்ஸபான போன்ற பிரதேசங்களில் வெள்ளத்தால் பேரழிவு ஏற்பட்டபோது, காத்தான்குடியில் சஹ்ரான் தலைமையில் நிவாரணப் பொருட்கள் பிரிக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டன.

இப்படி உதவிய சந்தர்ப்பங்களில் இன, மத பேதங்களை சஹ்ரான் பார்க்கவில்லை. தான் கொண்டு சென்ற நிவாரணப் பொருட்களை அவருடைய கைகளாலேயே சிங்கள மக்களுக்கு வழங்கினார். இந்தச் செய்திகள், அப்போது ஊடகங்களிலும் வெளியாகின.

யாழ்ப்பாணத்தில் ஒரு மாணவி பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டதற்கு எதிராக, மட்டக்கப்பில் பெரும் கூட்டங்களை சஹ்ரான் நடத்தியிருந்தார். அதேபோன்று, காத்தான்குடியில் ஒரு பெண் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுக் கொல்லப்பட்டது. அதில் கைது செய்யப்பட்ட சந்தேக நபருக்கு எதிராக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தும் வகையில், சஹ்ரான் தலைமையில் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. ரத்த தானம் வழங்கும் நடவடிக்கைகளை முன்னின்று சஹ்ரான் நடத்தியுள்ளார்.

அப்படியென்றால், சஹ்ரானின் வாழ்க்கை எந்தப் புள்ளியில் திசை மாறியது?

“2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10ம் தேதி. காத்தான்குடி அலியார் சந்தியில் போதைப்பொருளுக்கு எதிரான சமயப் பிரசாரத்தை நடத்துவதற்கு மௌலவி சஹ்ரான் தீர்மானித்தார். அதற்குரிய அனைத்துவிதமான அனுமதிகளும் உரிய தரப்புக்களிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்டன. ஆனாலும், அந்த நிகழ்வை நாங்கள் நடத்த முற்பட்ட வேளையில், காத்தான்குடியிலுள்ள மௌலவி ஒருவரின் ஆதரவாளர்கள் குழப்பத்தை ஏற்படுத்தி, எங்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள்.

நாங்கள் இவ்வாறான நிகழ்வுகளை நடத்தும்போது உரிய நேரத்துக்கு போலீஸார் வந்து பாதுகாப்பு வழங்குவார்கள். ஆனால், அன்றைய தினம் போலீஸார் வரவில்லை. பிறகு, அவசரத் தொலைபேசி இலக்கத்துக்கு அழைத்தே, போலீஸார் வரவழைக்கப்பட்டனர். அங்கு வந்த போலீஸார் எமது தரப்பைச் சேர்ந்த இருவரை, அந்த இடத்திலேயே கைது செய்தனர். பின்னர் இரண்டு நாட்கள் கழித்து போலீஸ் நிலையத்துக்கு வாக்குமூலம் வழங்குவதற்காகச் சென்றிருந்த, எமது அமைப்பைச் சேர்ந்த ஆறு பேர் கைது செய்யப்பட்டார்கள்.

இந்த பிரச்சனையுடன் தொடர்புபடுத்தி சஹ்ரான் மற்றும் அவரின் இளைய சகோதரர் றிழ்வான் ஆகியோருக்கு எதிராகவும் போலீஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில்தான், சஹ்ரான் தலைமறைவானார். இதற்குப் பிறகுதான் சஹ்ரானின் சிந்தனையிலும், பேச்சிலும் மாற்றங்கள் ஏற்பட்டதாக மௌலவி தௌபீக் விவரித்தார். சஹ்ரான் தலைமறைவாகியிருந்த காலப்பகுதியில் அவரின் ஃபேஸ்புக் கணக்கின் ஊடாக, அவர் பேசிய பல்வேறு காணொளிகள் பதிவிட்டிருந்தமையைக் காணக் கூடியதாக இருந்தது. ஒரு கட்டத்தில் இலங்கை அரசுக்கு எதிரான கருத்துகளை வெளிப்படுத்தும் வகையில் பேசி, அந்த காணொளிளை ஃபேஸ்புக்கில் பதிவிட்டு வந்தார்.

உதாரணமாக நாடாளுமன்றத்தை உடைக்க வேண்டும், நீதிமன்றங்கள் சரிப்பட்டு வராது என்றெல்லாம் அந்த காணொளிகளில் பேசியிருந்தார். இவற்றினையெல்லாம் பார்த்த நாங்கள், எமது அமைப்பிலிருந்தும் பள்ளிவாசல் நிருவாகத்திலிருந்தும் சஹ்ரான் மௌலவியை விலக்குவதாக 2017ஆம் ஆண்டு டிசம்பம் மாதம் எழுத்து மூலம் அறிவித்தோம். அதனை ஃபேஸ்புக் மற்றும் ஊடகங்களிலும் வெளியிட்டோம். இந்தக் காலகட்டத்தில் அரச உளவுத் துறையினர் எமது பள்ளிவாசலுக்கு வந்து, சஹ்ரான் குறித்து எம்மிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது எமது அமைப்பிலிருந்து சஹ்ரானை நாங்கள் விலக்கியதை தெரிவித்ததோடு, அதற்கான எழுத்து மூல ஆதாரத்தினையும் நாங்கள் காட்டினோம்.

இதேவேளை, சஹ்ரானின் ஃபேஸ்புக் கணக்கை நீங்கள் முடக்கலாம்தானே என்று எம்மை விசாரணை செய்ய வந்த உளவுப் பிரிவினரிடம் கேட்டோம். அதற்கு அவர்கள் உரிய பதில் எதையும் வழங்கவில்லை.

இது இவ்வாறிருக்க, சஹ்ரானின் சகோதரரான, மௌலவி ஸெய்னி என்பவரையும் எமது அமைப்பிலிருந்தும் பள்ளிவாசல் நிர்வாகத்திலிருந்தும் நாம் நீக்கினோம். இதனையடுத்து சஹ்ரானின் தந்தை, சகோதரர்கள் உள்ளிட்ட குடும்பத்தினர் எமது பள்ளிக்கு வருவதை நிறுத்திக் கொண்டனர்.

நாட்டில் இந்தக் குண்டுத் தாக்குதல் நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்பிருந்து சஹ்ரானின் குடும்பத்தவர்களைக் காணவில்லை. எங்கோ தலைமைறைவாகி விட்டனர். சஹ்ரானின் ஒரு தங்கைதான் திருமணமாகிய நிலையில் அவரின் குடும்பத்துடன் ஊரில் தற்போது இருக்கின்றார்கள். சஹ்ரானின் மனைவி பிள்ளைகளுக்கு என்னானது என்பது குறித்து தெரியவில்லை. அவர்கள் குருணாகல் பிரதேசத்தவர்கள் என்பதால், அவர்கள் பற்றி அறிய முடியவில்லை” என்றார் மௌலவி தௌபீக்.

1986ஆம் ஆண்டு சஹ்ரான் பிறந்ததாகவும், அவருக்கு இரு பிள்ளைகள் உள்ளனர் என்றும் தௌபீக் கூறுகின்றார். தேசிய தௌஹீத் ஜமா-அத் அமைப்பின் தலைமைப் பதவியையும், அந்த அமைப்புக்குரிய பள்ளிவாசல் நிர்வாகப் பொறுப்பினை தவிர்க்க முடியாமல் இப்போது, தான் பாரமேற்றுள்ளதாக மௌலவி தௌபீக் பிபிசியிடம் தெரிவித்தார்.

“சஹ்ரான் தலைமறைவான பிறகு ஒரு தடவை கூட, உங்களைத் தொடர்வு கொள்ளவிலையா”? “இல்லை,” என்கிறார் தௌபீக். “நீங்களும் அவரைத் தேடவில்லையா?”

“தேடினோம். அவரை போலீஸில் சரணடையச் செய்வதற்கு பலரும் விரும்பினார்கள். சஹ்ரான் சரணடைந்தால்தான், எமக்கு எதிரான வழக்கை இலகுவாக முடித்துக் கொள்ளலாம் என்று, எமது தரப்புச் சட்டத்தரணிகளும் கூறினார்கள். “ஆனால், கடைசி வரை சஹ்ரானை கண்டுபிடிக்க முடியவேயில்லை” தௌபீக், பேசி முடித்தார்.

சஹ்ரான் தலைமறைவாக இருந்த காலத்தில், அவருக்கு என்ன நடந்தது, யாருடன் எல்லாம் அவர் தொடர்பில் இருந்தார் என்பது பற்றியெல்லாம் தெரிந்து கொள்ள முடியவில்லை. சில ‘திரை’கள் விலகும் போதுதான், அனுமானிக்க முடியாத சில கேள்விகளுக்குப் பதில்கள் கிடைக்கக் கூடும்.

(யூ. எல். மப்றூக் பிபிசி தமிழுக்காக)