காதல் பிறந்தவுடன் ஒரு சாதாரண மனிதன் கலைஞனாகிறான். காதல் தொலைந்தவுடன் அந்தக் காதலனே கவிஞனுமாகிறான். “காதலை யாரும் விவரிக்க முடியாது… உணர மட்டுமே முடியும்” என கவிதையாகச் சொன்னாலும், ‘உண்மையில் காதல் என்பது கவிதையல்ல; அது இருபாலரிடையே தோன்றும் பல்வேறு வகையான ரசாயனங்களின் கலவைதான்’ என்று உறுதிசெய்கின்றன மருத்துவ ஆராய்ச்சிகள்.
சரி… காதலித்து மனமொத்து வாழும் தம்பதியரும் குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள். கடமைக்கு வாழும் தம்பதியரும் குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள். அப்படியென்றால், காதலோ, கெமிஸ்ட்ரியோ தேவையா என்ன?
ஓர் ஆணும் பெண்ணும் காதலிப்பதுதான் கெமிஸ்ட்ரி என்றால், ஓர் ஆண் பல பெண்களைக் காதலிப்பதும், ஒரு பெண் பல ஆண்களைக் காதலிப்பதும், ஆணை ஆணே அல்லது பெண்ணைப் பெண்ணே காதலிப்பதும் என்னவிதமான கெமிஸ்ட்ரி?
நம் கேள்விகளுக்கு விடை சொல்கிறது மருத்துவ அறிவியல்.
புரியாத புதிராக விளங்கும் இந்த ஆழமான காதலின் ஒவ்வொரு நிலையிலும், மூளையின் பல்வேறு வேதிப்பொருள்கள் தூண்டப்படுகின்றன.
வினை மற்றும் எதிர்வினைகளை இந்த ரசாயனப் பொருள்கள் ஏற்படுத்தி, உடலிலும் மனதிலும் காதல் கெமிஸ்ட்ரியை உருவாக்குகின்றன.
இவற்றையெல்லாம் இயக்குவது, மூளையின் ‘லிம்பிக் அமைப்பு’ என அழைக்கப்படும் ‘அமிக்டலா’, ‘ஹிப்போகாம்பஸ்’, அவற்றின் அருகே அமைந்துள்ள ‘ஹைபோதாலமஸ்’, ‘பிட்யூட்டரி சுரப்பி’ ஆகியவைதாம்.
`தேவதையைக் கண்டேன்… காதலில் விழுந்தேன்…’ என்று கரன்ட் ஷாக் அடித்ததுபோல, பார்த்தவுடனே வரும் காதல்தான் காதலின் முதல்நிலை. பசி, தூக்கம் மறந்து காதல் ஒன்றே குறிக்கோளாக வாழும் போதை மூளைக்குள் ஏறிவிடும்.
வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா ஓர் உருண்டை உருள்வதும், வயிற்றுக்குள் பட்டாம்பூச்சிகள் பறப்பதும் காதலோ, காதலியோ செய்யும் செயல் அல்ல.
மூளைக்குள் சுரக்கும் நியூரோட்ரான்ஸ்மிட்டரான ‘டோபமைன்’ என்ற நரம்பூக்கியின் செயல்பாடு அது. ஆக, ‘கண்டேன் காதலை’ என்று கவிதையில் சொல்லப்படுவது உண்மையில் ‘டோபமைன் காதல்’ என்கிறார்கள் அறிவியல்பூர்வமாக.
டோபமைன், கண்டவுடன் தோன்றும் காதலுக்கு மட்டும் சுரப்பதில்லை. அதற்கெல்லாம் முன்பே உடல் அசைவு, ஞாபகத்திறன், கவன ஈர்ப்பு, கற்கும் ஆற்றல், பேச்சுத் திறமை என அனைத்திலும் முன்னின்று வழிநடத்துவதும் இந்த ‘மோட்டிவேஷன் மாலிக்யூல்’தான்.
அதோடு, தன்னைப்போலவேயிருக்கும் தனது உற்ற நண்பனான அட்ரீனலின் அளவையும் டோபமைன் கூட்டுவதால், இதயம் படபடத்து, சுவாசம் அதிகரித்து, முகம் சிவந்து, நாக்கு உலர்ந்து, வியர்த்துக் கொட்டி, வார்த்தைகள் தடுமாறி காதலர்களை நிலைகொள்ளாமல் மாற்றவும் செய்கிறது.
கண்டதும் தோன்றிய காதல் கனிந்தவுடன் படபடப்பு குறைந்து, ‘நான் போகிறேன் மேலே, மேலே… பூலோகமே காலின் கீழே…’ எனும் போதை நிலைதான் காதலின் அடுத்தநிலை.
இந்தநிலையில் ‘டோபமைன்’ சிறிது குறைந்து, ‘செரட்டோனின்’ என்ற ‘ஹேப்பி ஹார்மோன்’ அதிகமாக வேலை செய்யத் தொடங்குகிறது.
அதனால்தான், மகிழ்ச்சி, மன நிறைவு, திருப்தி, நிம்மதி, ஒற்றுமை போன்ற நேர்மறை உணர்வுகளோடு, உலகிலேயே தங்களது காதல்தான் மிகவும் சிறந்தது, உன்னதமானது என்று காற்றில் மிதந்தபடி கவிதையும் எழுதத் தொடங்குகிறார்கள் காதலர்கள்.
உண்மையில், மனஅழுத்தம் மற்றும் தூக்கமின்மையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, ‘செரட்டோனின்’ வகை மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரைப்பதும் இந்த ‘ஹேப்பி’ மற்றும் ‘மோட்டிவேஷன்’ ஹார்மோனின் நேர்மறைப் பயன்களால்தான்.
‘பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி வாலெயிறு ஊறிய நீர்.’
`முத்து போன்ற மென்மையான குரலும், வெண்மையான பற்களும்கொண்ட காதலியின் உமிழ்நீரானது, தேனுடன் பால் கலந்தாற்போல சுவைகொண்டது’ என்றெல்லாம் அன்று வள்ளுவர் பாடியதும் இந்த ‘செரட்டோனின்’ காதலைத்தான்.
கண்டதும் காதல்கொண்டு, அந்தக் காதலில் வெற்றியும் கொண்டபின் அலைபாயும் மனதை அடக்கியாண்டு வாழ்க்கையை நோக்கித் தயார்செய்வது, காதலின் அடுத்த மெச்சூர் நிலை. இந்த நிலைதான், காதலின் முழுமை நிலையும்கூட.
இந்த முழுமையான காதலுக்கு, வெறும் கவிதை மட்டுமே போதாது. சிறிது நம்பிக்கையும், நாணயமும், எதிர்காலத் திட்டமிடலும் தேவை. அதனால் ‘டோபமைன்’ மற்றும் ‘செரட்டோனின்’ ஆகியவற்றின் கிளர்ச்சி குறைந்து, ‘ஆக்ஸிடோசின்’ என்ற லவ் ஹார்மோன், உயிர்க் காதலின் சிறப்பு வேதிப்பொருளாக மெள்ளத் தலையைத் தூக்குகிறது.
தேடியடைந்த காதலின் வெற்றி தந்த நம்பிக்கை, ‘ஆக்ஸிடோசின்’ என்ற அரவணைப்பு ஹார்மோனை (Cuddle Hormone) ஹைபோதாலமஸின் கட்டளைப்படி பிட்யூட்டரியில் சுரக்கச்செய்கிறது.
இந்த ‘ஆக்ஸிடோசின்’தான் திருமண பந்தம், குழந்தைப்பேறு, எதிர்காலம் என உறவினை வலிமையாக்கி வாழ்க்கையின் எதிர்காலத்தைத் திட்டமிட, பெரிதும் உதவுகிறது.
காதல் மற்றும் அதன் புரிந்துணர்வுக்கு மட்டுமன்றி, பிள்ளைப்பேறு, பாலூட்டுதல், தாய்க்கும் சேய்க்குமிடையே ஏற்படும் பந்தம் எனப் பல உன்னதமான பணிகளையும் சேர்த்தே செய்கிறது இந்த ஆக்ஸிடோசின் ஹார்மோன்.
தன்னை ஏற்றுக்கொள்ளாத பெண்ணின் முகத்தில் ஆசிட் அடித்ததற்கும் கொலை செய்ததற்கும் காரணம் காதல்தான் என்கிறார்களே குற்றம் செய்தவர்கள்.
பிரியமானவர்களையே சிதைக்கத் துணியும் இந்த வகைக் காதலுக்கு என்ன காரணம்? இதற்கும் அதே ஆக்ஸிடோசினும், அதனூடே தாறுமாறாகச் சுரக்கும் டோபமைனும்தான் காரணம் என்கிறது அறிவியல்!
காதலில் முழுமையான நம்பிக்கையைத் தரும் ஆக்ஸிடோசின், அதே காதல் நம்பிக்கை இழக்கும்போது அதிகளவில் சுரந்து கோபம், பொறாமை, வன்முறை ஆகியவற்றை தூண்டச் செய்கிறது.
ஆனால், காதலில் தோற்ற எல்லோரும் காதலியையோ, காதலனையோ தாக்க முற்படாமல், ‘இதயம்’ முரளிபோல பெரும்பாலான தருணங்களில் சோக ராகம் பாடுவதற்குக் காரணம் என்னவென்றால், `அது எண்டார்பின்கள் செய்யும் வேலை’ என்கின்றனர் நரம்பியல் நிபுணர்கள்.
அழுகை, கோபம், வலி, துன்பம் என அத்தனை உணர்ச்சிகளிலும் நம் உடலில் அதிகம் சுரக்கும் இந்த ‘எண்டார்பின்’ வகை நரம்பு ஊக்கிகளை, ‘உடலுக்குள்ளேயே இயங்கும் போதை மருந்து’ என்றே அழைக்கிறார்கள்.
இந்த எண்டார்பின், உடல்வலியைக் குறைப்பதுடன், காதல் தோல்வியால் ஏற்படும் மனவலியையும் குறைத்து, நாம் அடுத்தநிலைக்குப் பயணிக்கவும் உறுதுணையாக நிற்கிறது என்பதுதான் மகிழ்ச்சிகரமான தகவல்.
`காதலின் வெற்றிக்கும் தோல்விக்கும் இத்தகைய கெமிஸ்ட்ரி நிகழும் அதே தருணத்தில், ஓரினக் காதல், இந்த ஹார்மோன்களும், இவற்றுடன் சேர்ந்து சுரக்கிற ‘ரீ புரொடக்டிவ் ஹார்மோன்கள்’ (Reproductive Hormones) என அழைக்கப்படும் ‘ஈஸ்ட்ரோஜென்’, ‘டெஸ்டோஸ்டீரான்’ ஆகியவற்றின் நிலைகளும் மாறும்போது நிகழ்கிறது’ என்கிறது மருத்துவ அறிவியல்.
ஆக, மூளையில் சுரக்கும் ‘டோபமைன்’, ‘செரட்டோனின்’, ‘ஆக்ஸிடோசின்’, ‘எண்டார்பின்கள்’ ஆகிய நான்கு நியூரோட்ரான்ஸ்மிட்டர்களும் காதலை பலப்படுத்துகின்றன அல்லது பலவீனப்படுத்துகின்றன.
மற்ற ஹார்மோன்களான ‘டெஸ்டோஸ்டீரான்’, ‘ஈஸ்ட்ரோஜென்’, ‘வேசோப்ரெஸ்ஸின்’, ‘கார்டிசால்’, ‘நார்-அட்ரீனலின்’ ஆகியவை அவ்வப்போது இவற்றுக்குத் துணை நிற்கின்றன.
இந்த நியூரோட்ரான்ஸ்மிட்டர்கள் அல்லது ஹார்மோன்கள் அனைத்தும் மைக்ரோ அல்லது நானோ அளவுகளில் மூளையில் சிறு தூறல்கள்போல அவ்வப்போது சுரக்கின்றன. அதனால்தான், காதல் எப்போதும் ஒரு ‘ரோலர் கோஸ்டர்’ பயணம்போல ஏற்ற இறக்கங்களுடன் காணப்படுகிறது.
ஆனால், `இந்த ஏற்ற இறக்கங்கள் அனைத்தும் மனிதனின் பரிணாம வளர்ச்சிக்கும் மரபணு மாற்றத்துக்கும் பெரிதும் உதவுகின்றன’ என்கிறது மருத்துவ ஆய்வு.
காதலின் மந்திரச் சொற்கள் மூன்று.
Accept (ஏற்றுக்கொள்வது)
Adapt (மாற்றிக்கொள்வது)
Arrange (சீராக்கிக்கொள்வது)
ஆதலினால் காதல் செய்வோம்..!