பொறுமையுடன் செயற்பட்டால், பயங்கரவாத செயற்பாடுகளை இரண்டு வருடங்களில் முழுமையாக கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வர முடியும் என தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போரை முடிவுக்கு கொண்டு வந்த முன்னாள் ராணுவ தளபதி பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்துடன் இன்று சனிக்கிழமை நடைபெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது பொன்சேகா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போரை முடிவுக்கு கொண்டுவர தாம் இலகு வழிகளை பின்பற்றிய போதிலும், அது வெற்றியளிக்கவில்லை என சுட்டிக்காட்டிய பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா, முறையான திட்டத்தின் மூலமே அதனை வெற்றி கொண்டதாகவும் நினைவூட்டினார்.
இதன்படி, இலங்கையில் தற்போது நிலைகொண்டுள்ள பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வர தாம் அவ்வாறான திட்டமொன்றை முன்னெடுக்க வேண்டும் எனவும் கூறினார்.
இதேவேளை, பயங்கரவாதத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான திட்டம் எதுவும் அரசாங்கத்திடம் கிடையாது எனவும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
கேள்வி: பாதுகாப்பு செயலாளர் பதவி தொடர்பில் உங்களின் நிலைப்பாடு என்ன?
புதில்: பாதுகாப்பு செயலாளர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும்.
கேள்வி: நீங்கள் அந்த பதவியை ஏற்பீர்களா?
புதில்: நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து, அதன் பின்னர் அமைச்சராக இருந்த எனக்கு மீண்டும் அந்த இடத்திற்கு செல்ல முடியாது.
கேள்வி: அவ்வாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டால் என்ன செய்வீர்கள்?
புதில்: அவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டால், அதனை நான் நிராகரிப்பேன். செயலாளர் பதவிக்கு செல்ல வேண்டிய தேவை கிடையாது. ராணுவ தளபதி பதவியை பொறுப்பேற்குமாறு வேறு யாராவது பின்னர் கூறுவார்கள். அவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியாது அல்லவா?
இந்த பிரச்சனை 100 சதவீதம் நிறைவடைந்தது என்ற நிலைக்கு வருவதற்கு நிச்சயமாக இரண்டு வருடங்களாவது பொறுமையாக கடமையாற்ற வேண்டும். அவ்வாறின்றி இந்த பிரச்சனையை நிறைவு செய்ய இலகு வழிகள் கிடையாது என்றார் .