24 மணித்தியாலங்களில் பலத்த சூறாவளி?

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்காக விருத்தியடைந்த தாழமுக்கமானது சூறாவளியாக மாற்றம் பெற்று தொடர்ந்து 24 மணித்தியாலங்களில் பலத்த சூறாவளியாக விருத்தியடையக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் இன்றைய வானிலை தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்படி விடயத்தை குறிப்பிட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும்,

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், தென், சப்ரகமுவ வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது

புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக திருகோணமலை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு முதல் மேற்கு வரையான திசைகளிலிருந்து திசையிலிருந்து வீச கூடும்.

காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30 – 40 கிலோமீற்றர் வரை காணப்படும். (பலமான சூறாவளியாக விருத்தியடைந்த பின் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 50 – 60 கிலோமீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் வீசலாம்).

இலங்கைக்கு கிழக்காகவும், தென்கிழக்காகவும் உள்ள ஆழம் கூடிய கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 70 – 80 கிலோமீற்றர் வரை காணப்படுவதுடன், அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 90 கிலோமீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் வீசும் சாத்தியம் காணப்படுகிறது.

இந்த வேளைகளில் கடல் மிகவும் கொந்தளிப்பாகவும், உயர் அலைகளுடனும் காணப்படும். (தொகுதியின் மையப் பகுதியிலிருந்து 200 – 300 கிலோ மீற்றர் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 100 கிலோமீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் வீசக்கூடும்).

இலங்கைக்கு தென்கிழக்காக உள்ள ஆழம் கூடிய வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் மறு அறிவித்தல் வரை மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

பொது மக்களும், கடலில் பயணம் செய்வோரும், மீனவ சமூகமும் இவ்விடயம் குறித்து வளிமண்டலவியல் ஆராய்ச்சி திணைக்களத்தால் எதிர்காலத்தில் தொடர்ந்து வழங்கப்படும் ஆலோசனைகள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டி கொள்ளப்படுகிறீர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இலங்கையின் பல மாவட்டங்களில் அதிகளவிலான மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதால் சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது