வவுனியாவில் சூறாவளியால் வீடுகள் பெரும் சேதத்திற்குள்ளாகியுள்ளன

வவுனியா பறன்நட்டகல் பனிக்கன்குளம் கிராமத்தில் இன்று மாலை 3.30 மணியளவில் வீசிய மினி சூறாவளியினால் 10 இற்கும் அதிகமான வீடுகள் பெரும் சேதத்திற்குள்ளாகியுள்ளன.

திடீரென வீசிய மினி சூறாவளியுடன் கூடிய மழையினால் வீட்டின் கூரைகள் தூக்கி வீசப்பட்டதுடன் பயன்தரு மரங்களான தென்னை, வாழை மற்றும் பல மரங்கள் சரிந்து வீழ்ந்துள்ளன.

வீடொன்றின் கூரை சுமார் 100 மீற்றர் வரையில் தூக்கி வீசப்பட்டுள்ளதுடன் அதற்கு பயன்படுத்தப்பட்ட மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளன.

இந்நிலையில் தற்காலிக வீடுகள் முற்றாக சேதமைந்துள்ளதுடன் வீட்டினுள் இருந்த பொருட்கள் அனைத்தும் மழையினால் நனைந்துள்ளதாகவும் கிராமத்தவர்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து 10 தற்காலிக வீடுகளும் 4 நிரந்தர வீடுகளும் சேதமடைந்துள்ளதாக கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.

இதேவேளை சேத விபரங்கள் தொடர்பாக கிராம சேவகர் தகவல்களை பதிவு செய்துள்ள நிலையில் வீடுகள் பாதிப்படைந்தவர்களை தங்க வைப்பதற்கு கிராத்தவர்கள் ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.