பயங்கரவாதத் தாக்குதலையடுத்து சர்வதேசத்திடம் உதவிகோரும் இலங்கை அரசாங்கம், யுத்தக்காலத்தின்போது தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டபோது ஏன் இவ்வாறானதொரு நடவடிக்கையை மேற்கொள்ளவில்லையென வடக்கு மாகாணசபையின் முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் கேள்வியெழுப்பியுள்ளார்.
யாழில், இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், அரசியல்வாதிகளின் ஒத்துழைப்பு இல்லாது இலங்கையில் பயங்கரவாத தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டிருக்க முடியாதென்றும் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றில்கூட இந்த விடயம் தொடர்பாக பகிரங்கமாக பேசப்பட்டுவரும் நிலையில், உண்மை நிலையை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டுமென்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.