மன்னாரின் பல பகுதிகளில் இன்று (திங்கட்கிழமை) காலை முதல் சுற்றிவளைப்பு நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது.
குறிப்பாக முஸ்லிம்கள் செறிந்து வாழும் உப்புக்குளம், நளவன் வாடி, பள்ளிமுனை, மூர்வீதி ஆகிய பகுதிகளில் இன்று காலை 6 மணிமுதல் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை இடம்பெறுவதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.
நூற்றுக்கணக்கான இராணுவம், பொலிஸார், கடற்படையினர் இணைந்து வீதிகளை மறித்து சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டிலுள்ள உடைமைகளை முழுமையாக சோதனைக்கு உட்படுத்தியுள்ளதோடு, வீட்டிலுள்ளவர்களின் விபரங்களையும் பரிசீலினை செய்துள்ளனர்.
மேலும் வீதியில் செல்பவர்களின் அடையாள அட்டை பரிசீலினை செய்யப்படுவதோடு, மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட ஏனைய வாகனங்களும் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
குறிப்பாக பள்ளிமுனை-உப்புக்குளம் பிரதான வீதியில் வீதித்தடைகள் அமைக்கப்பட்டு சோதனைகள் இடம்பெறுகின்றன.
நாட்டில் கடந்த ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்களை தொடர்ந்து, பல பகுதிகளில் வெடிபொருட்களும் கைக்குண்டுகளும் பாரிய ஆயுதங்களும் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. அத்தோடு, கிழக்கின் குறிப்பாக சம்மாந்துறை, சாய்ந்தமருது உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதோடு, தாக்குதலும் நடத்தப்பட்டது. இதில் 15 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், நாட்டின் பல பகுதிகளிலும் சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.