பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதல்களில் 253க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன் 500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் தாக்குதல் சம்பவம் குறித்து முன்கூட்டியே பொலிஸ்மா அதிபர் பூஜித்துக்கு தகவல் கிடைத்தும் அதனை தடுப்பதற்கு வேண்டிய எந்ததொரு நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லையெனவும் அரசாங்கத்துக்கும் தெரியப்படுத்தவில்லையெனவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த சம்பவத்துக்கு பொறுப்பேற்றுக்கொண்டு பதவி விலகுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் வலியுறுத்தியுள்ளார்.
அதேபோன்று பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவை பதவி நீக்குவது குறித்த யோசனையொன்றை எதிர்வரும் வாரத்தில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வில் முன்வைக்கவுள்ளதாக ஐ.தே.க உறுப்பினர்களும் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு இலங்கை பாரிய அச்சுறுத்தலுக்கு முகம்கொடுக்க போகின்றதென அறிந்திருந்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாத பொலிஸ்மா அதிபர் உடனடியாக பதவி விலக வேண்டுமென ஏனைய அரசியல் கட்சிகள், பொது அமைப்புக்கள் உள்ளிட்ட பல அமைப்புகள் பகிரங்கமாக அறிவிப்பு விடுத்துள்ளன.
இந்நிலையிலேயே பொலிஸ்மா அதிபர் பூஜித்துக்கு கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.